×

வடகிழக்கு பருவமழையால் நிறுத்தப்பட்ட குடிமராமத்து பணிகளை மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையால் நிறுத்தி வைக்கப்பட்ட குடிமராமத்து பணிகளை மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும் என்று அரசு செயலாளர் மணிவாசன் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ₹499.69 கோடியில் நடக்கும் 1,829 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு கடந்த ஜூன் மாதம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் சங்கம், ஆயக்கட்டுதாரர்கள் மூலம் இப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் சார்பில் சங்கங்கள், ஜிஎஸ்டி கணக்கு பதிவு செய்வதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் உடனடியாக பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பணிகளை தொடங்கிய விவசாயிகளுக்கு நிதியை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த பருவமழை காரணமாக குடிமராமத்து திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  

இது குறித்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, குடிமராமத்து திட்ட தலைமை பொறியாளர் தனபால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், வரும் மார்ச் 31ம் தேதிக்குள் குடிமராமத்து திட்ட பணிகளை முடிக்க வேண்டும் என்று பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதே நேரத்தில் ஏரிகளில் தண்ணீர் தேங்கி இருந்து பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும் பட்சத்தில் அந்த ஏரிகளில் தண்ணீர் குறைந்தவுடன் பணிகளை தொடங்கலாம். இந்த பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நடப்பாண்டில் 5000 ஏரிகள் புனரமைப்பு பணி 1000 கோடியில் நடக்கவுள்ளது. இந்த பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக, ஏற்கனவே நடந்து வரும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags : government ,Tamil Nadu ,completion ,north-east , Northeast Monsoon, Citizenship, Tamil Nadu Government
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...