×

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைகள் இனி கிடைக்குமா? தனியாருக்கு தாரை வார்க்க திட்டம்,. நிதி ஆயோக் பரிந்துரையால் அபாயம்

புதுடெல்லி: மாவட்ட தலைமை மருத்துவமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் நிதி ஆயோக் ஒரு பரிந்துரையை அளித்துள்ளது. இது செயல்வடிவம் பெற்றால், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்க தொடர வாய்ப்பு இல்லாத நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், உணவு முறை, வாழ்க்கை முறை போன்றவற்றால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிய நோய்களும் அவ்வப்போது பயமுறுத்துகின்றன. இதற்கேற்ப, மருத்துவ செலவுகளும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சிலர், இதில் இருந்து தப்பிக்க மருத்துவ காப்பீடுகளில் முதலீடு செய்து வைத்துள்ளனர். இது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை. குறிப்பாக, சாமானிய மக்களுக்கு ஆபத்பாந்தவனாக திகழ்வது அரசு மருத்துவமனைகள்தான். அங்கு இலவச சிகிச்சை பெற்று பலன் அடைகின்றனர்.

 இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் நிதி ஆயோக் பரிந்துரை திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மாவட்ட மருத்துவமனைகளை தனியார் மருத்துவ கல்லூரிகளுடன் இணைத்தல் என்ற தலைப்பில், நிதி ஆயோக் நிறுவனம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதில், அரசு மாவட்ட மருத்துவமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் விதமாக கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.  நாட்டில் தகுதி வாய்ந்த மருத்துவர்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. இதை போக்க, தனியார் அரசு பங்களிப்பு என்ற நடைமுறைப்படி, மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து செயல்படுத்தலாம் என்று நிதி ஆயோக் யோசனை கூறியுள்ளது.  மாவட்ட மருத்துவமனைகளை இணைத்து மருத்துவ கல்லூரிகளாக மாற்றும்போது, அந்த மருத்துவமனை 750 படுக்கைகள் கொண்டதாக இருக்க வேண்டும். அதில் ஏறக்குறைய பாதி அளவு படுக்கைகளில் ேநாயாளிகளுக்கு கட்டண சிகிச்சை அளிக்கப்படும். இதில் கிடைக்கும் வருவாய் மூலம், மீதி படுக்கைகளில் இலவச சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது.

 ஆனால், தனியார் கல்லூரிகள் தங்களிடம் ஒப்படைக்கப்படும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்து வசூல் செய்யலாம். இதுபோல், இலவச சிகிச்சை யாருக்கு அளிக்கலாம் என்பதையும் தனியார் நிர்வாகமே முடிவு செய்யும். இவ்வாறு தனியாரிடம் மாவட்ட அரசு மருத்துவமனைகளை ஒப்படைப்பதற்கான மாதிரி ஒப்பந்த படிவத்தையும் நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.  இதன்படி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள், இலவச சிகிச்சை பெறுவோர், கட்டண சிகிச்சை பெறுவோர் என பிரிக்கப்படுவார்கள். இலவச சிகிச்சை பெறும் நோயாளி, அந்த மருத்துவமனை நிர்வாகம் நியமித்த அதிகாரியிடம் அத்தாட்சி சான்றிதழை வாங்க வேண்டும்.அப்போதுதான் அந்த மருத்துமவனையில் சிகிச்சை பெற முடியும். இல்லாவிட்டால் அவர் இலவச சிகிச்சை பெற முடியாது.  மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக சந்தை விலையில் நிர்ணயிக்கப்படும். அதோடு, மாவட்ட மருத்துவமனைகளை நிர்வகிக்கும் தனியார் நிர்வாக குழு, ஆண்டுக்கு ஒரு முறை இவற்றை மறு வரையறை செய்ய முடியும் என கூறப்படுகிறது. இதுபோன்று, மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு தாரை வார்க்க வழி வகுக்கும் திடுக்கிடும் அம்சங்கள் பல பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன.

 இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், அரசு மருத்துவமனைகளில் அப்பாவி ஏழைகள் சிகிச்சை பெறுவது இயலாததாகிவிடும். 50 சதவீதம் படுக்கைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என கூறப்பட்டாலும், ஏழைகள் அனைவருக்கும் இலவச சிகிச்சை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என மருத்துவ துறையினர் சிலர் தெரிவிக்கின்றனர். ஏனெனில், தனியார் கட்டுப்பாட்டில் சென்ற பிறகு, இதை அவர்கள்தான் தீர்மானம் செய்கிறார்கள். இவ்வாறு 60 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இலவச சிகிச்சை பெறுவதை தடுக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்து விடும் அபாயம் உள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. நிதி ஆயோக் பரிந்துரைப்படி பார்த்தால், இவற்றில் பெரும்பாலான மருத்துவமனைகள் தனியார் நிர்வாக கட்டுப்பாட்டில் சென்று விடுவதற்கான அபாயம் உள்ளது. அதோடு, அனைத்து வசதிகளும் கொண்ட அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைப்பது வரி செலுத்தும் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

 அரசு மருத்துவமனைகள் பல நவீன வசதிகளுடன் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவற்றை ஒப்படைப்பது அறிவார்ந்த செயல் அல்ல. தங்கத்தை வைத்துக்கொண்டு, அதை பாலீஷ் போட பணம் இல்லை என்று கூறி வேறொருவரிடம் ஒப்படைப்பது போலத்தான், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி தனியாருக்கு அரசு மருத்துவமனைகளை தாரை வார்க்கும் இந்த செயல் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரை மீது கருத்துக்களை தெரிவிக்க 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : district head hospitals ,persons ,AoC , District Government Head Hospitals, Free Treatments, Financial Ayok
× RELATED தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த...