×

தமிழக பொதுப்பணித்துறையில் தற்காலிக பணியாளர்கள் நியமனத்துக்கு தடை: முதன்மை தலைமை பொறியாளர் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் தற்காலிக பணியாளர்களை புதிதாக நியமனம் செய்ய தடை விதித்து முதன்மை தலைமைப் பொறியாளர் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாக நீர்வளப்பிரிவில் 4560 பேரும், கட்டுமான பிரிவில் 2,550 பேரும் நியமனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 4567 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 7 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊதியத்தை உயர்த்த கோரிக்கை வைத்தனர். இதையேற்று தற்காலிக பணியாளர்களுக்கு ஊதிய வரன்முறை செய்து தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின் படி தகுதியான பட்டியலில் இடம்பிடித்தவர்களுக்கு மாதம் தலா ₹18 ஆயிரம் ஊதியம் கிடைக்கலாம். தொடர்ந்து தகுதியான தற்காலிக ஊழியர்களின் பட்டியல் அந்தந்த கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களுக்கு மறு ஒதுக்கீடு ஆணை வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது, புதிதாக தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ய திடீரென தடை விதித்து பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தடை விதித்துள்ளார். ஏற்கனவே, தற்காலிகமாக 7110 பேரை நியமிக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், 4567 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால், கூடுதல் பணிச்சுமையால் தற்காலிக ஊழியர்கள் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தற்போது தமிழகத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்கும் வகையில் தான் தமிழக அரசு சார்பில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தற்போது அந்த தற்காலிக பணியிடங்களிலும் யாரையும் எடுக்கக்கூடாது என்றும் அதையும் மீறி புதிய பணியாளர்களை எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Tamil Nadu Public Works Department ,Principal Chief Engineer Action Directive , Chief Engineer, Public Works Department, Tamil Nadu
× RELATED ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற...