×

பொங்கல் பரிசு, 1000 ரொக்கம் வழங்குவதையொட்டி ரேஷன் கடைகள் 10ம் தேதி செயல்படும்: 16ம் தேதி விடுமுறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு மற்றும் 1000 வழங்குவதையொட்டி வருகிற 10ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என்றும், அதற்கு பதில் 16ம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ₹1000 ரொக்கம் மற்றும் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, வருகிற ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் 1000 ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு ₹2,363 கோடி நிதியும் ஒதுக்கி அரசாணையும் வெளியிட்டுள்ளது. இந்த பணம் அந்த மண்டல மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருகிற 9ம் தேதி (வியாழன்) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை. ஆனால் வருகிற 10ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கு இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பொது விநியோக திட்ட நியாயவிலை கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வருகிற 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. பொது விநியோக திட்ட நியாயவிலை கடைகளுக்கு வருகிற 10ம் தேதி (வெள்ளி) வாராந்திர விடுமுறை நாளாகும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதால், 10ம் தேதி அன்று நியாயவிலை கடைகளுக்கு வேலை நாளாகும். அதற்கு பதிலாக வருகிற 16ம் தேதி (வியாழன்) அன்று நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ration shops ,announcement ,holiday announcement ,shops , Pongal gift, 1000 cash, ration shops, holidays
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு