×

தமிழக மின்வாரியத்தில் கணக்கீட்டாளர் பற்றாக்குறையால் பல்வேறு திட்டப்பணிகள் முடக்கம்: தொமுச குற்றச்சாட்டு

சென்னை : மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள கணக்கீட்டாளர் பற்றாக்குறையால், பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தொமுச குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, விவசாயம் உள்ளிட்ட பிரிவுகளில் ஏராளமான மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசம், 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக வாரியத்துக்கு ஏற்படும் செலவு தொகையை, அரசு வழங்கி வருகிறது.இந்த வீடு சார்ந்த மின் இணைப்புகளை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது அங்குள்ள மீட்டரில் பதிவாகியிருக்கும் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்ய வேண்டும். பிறகு அந்த விபரத்தை நுகர்வோரிடம் உள்ள மின்கணக்கீட்டு அட்டையில் எழுத வேண்டும்.பின்னர் அலுவலகத்திற்கு வந்து, அங்குள்ள கணினியில் பதிவு செய்ய வேண்டும். ஊழியர் வந்து கணக்கு எடுத்ததில் இருந்து 20 தினங்களுக்குள், நுகர்வோர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் அபராதத்துடன் கட்டணம் செலுத்த நேரிடும். இந்நிலையில் மின்வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், கணக்கீட்டாளர் பணியிடமும் ஒன்று. இதனால் பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தொமுச குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து தொமுச நிர்வாகி அ.சரவணன் கூறியதாவது: பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக மின் கணக்கீடு உரிய நேரத்தில் எடுக்கப்படுவதில்லை. அலுவலகத்தில் நேரில் வருமாறு கூறி மின் கட்டணம் வசூலிக்கிறார்கள். வீடுகளில் உள்ள மின் அட்டையில் மின் கணக்கீட்டை பதிவு செய்யாமல் மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள கணினியில் நேரடியாக மின் கட்டணத்தைப் பதிவு செய்யும் நிலை காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் முறையாக கணக்கீடு செய்யாததால் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலையும் ஏற்படுகிறது. மின் வாரியத்தில், தற்போது உள்ள மின் இணைப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கீட்டாளர்கள் பணியமர்த்தப்படாததால், கணக்கீட்டு ஆய்வாளர்களே மின் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்திருட்டில் ஈடுபடுவோரின் இணைப்பை துண்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.



Tags : accountant ,Tamil Nadu Power Plant ,Power Station , Tamil Nadu Electricity Board, kanakkittalar, lpf
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி