×

நாதியற்ற நிலையில் வீதிகளில் தொடரும் நாடோடிகள் வாழ்க்கை

ஓரிடத்தில் இல்லாமல் சுற்றித் திரிந்துகொண்டே இருப்பதால் இவர்கள் ‘நாடோடிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் நாடோடி இனத்தவர்கள். தமிழகத்தில் 5 லட்சம் நாடோடி மக்கள் வசிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. திருவிழாக்கள், சந்தைகள் என்று மக்கள் கூடும் இடங்களே இவர்களது வயிற்றுப்பசி போக்க வருமானம் தரும் களங்கள். ஊர் ஊராகச் செல்லும் இவர்கள் பஸ் நிலையம், ரயில் நிலையம் என்று காலியாகக் கிடக்கும் இடங்களில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.இந்தியாவில் 862 நாடோடி இனத்தவர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் 162 நாடோடி இன மக்கள் எந்த பட்டியலிலும் இடம்பெறாமல் உள்ளனர். அடையாளம் இல்லாத இவர்களை ஆதரிப்பார் யாரும் இல்லை. சாதிச்சான்றுகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடியுரிமைச் சான்று, இருப்பிடச் சான்று என்று அரசின் எந்தச் சான்றும் இவர்களிடம் இல்லை. குறிப்பாக நாடோடி மக்களின் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி உரிமை கூட கிடைப்பதில்லை.

இதனால் அவர்களின் வாழ்க்கை பயணம் தடம் மாறிக் கொண்டிருப்பதற்கான அவலங்களையும் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. பெரும்பாலான நாடோடிகள் தங்கள் குழந்தைகளை தங்களுடனேயே  அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இருப்பதில்லை.  தற்போது இது போன்ற மக்களை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்காக, சில அமைப்புகள் போராடத் துவங்கியுள்ளது. நாடோடி மக்களின் மேம்பாட்டுக்காக அரசு தனி நலத்துறையை உருவாக்கி, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தால் அவர்களும், அரிய சாதனையாளர்களாக ஜொலிப்பார்கள் என்பது நாடோடி மக்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் ஆதங்கம். நாடோடிகள், சுதந்திரப் பறவைகள். அளவான உடைமைகள் உடையோர். உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் ஆதி மனிதன் செய்த பயணம் இன்னும் இவர்களுக்குள் முடியவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. பயணம் மட்டுமே இவர்களுக்கு வாழ்க்கை.

தேசங்களின் எல்லைகளை தகர்த்த தெய்வங்கள். எந்த பள்ளிகூடங்களும் கற்றுத் தராத ‘எளிமையான வாழ்க்கை முறை’ ஒன்றை உலகத்தாரின் செவிப்பறைகளில் அறைந்து போதிக்கின்ற கூடாரக் கோவில்களில் வாழ்க்கை நடத்துபவர்கள். உலகில் மிக உன்னதமான வாழ்வைப் பெற்ற மனிதர் கூட்டம் இந்த நாடோடிக்கூட்டம்தான். வாழ்க்கையின்  தத்துவத்தை  உணர்த்தும் இவர்களை வாழ்விக்க, மனிதநேயத்துடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது சமூக சிந்தனையாளர்களின் ஒட்டுமொத்த எண்ணமாக உள்ளது.

பட்டியலில் இல்லை ; சலுகைகளும் இல்லை: தமிழகத்தைச் சார்ந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என இரு பிரிவுகளிலும் 162 நாடோடி இன மக்கள் உள்ளனர். ஆனால்  அரசு தயாரித்துள்ள இன பட்டியல்களில் இடம் பெறாமல் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அரசு வழங்கும் கல்வி, வீடு, உணவு, மற்றும் சாதாரணமாக மக்களுக்கு நிடைக்கும் உரிமைகள் எதுவுமே இவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது இம்மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளின் வேதனை.


தமிழகத்தில் 5 லட்சம் பேர்
தமிழகத்தில் விழுப்புரம், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகமான எண்ணிக்கையில் நாடோடி மக்கள் வாழ்கின்றனர். இதேபோல் அனைத்து மாநிலங்களிலும் பல குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 7.5 சதவீத மக்கள் நாடோடிகளாகவே வாழ்கின்றனர். தமிழ்நாடு மாநில மக்கள் தொகையில் 5 லட்சம் மக்கள் நாடோடிகளாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் நாடோடிகள்
தமிழகத்தில் சங்க காலத்தில் பாணர்கள், கூத்தர்கள், விறலியர்கள், பொருநர்கள், கோடியர்கள், மற்றும் கட்டுவிச்சிகள் என பல இனத்தவர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்கள் மன்னர் ஆட்சி முடிந்து, ஜமீன் ஆட்சிக்குப்பின்னர் ஆங்கிலேய ஆட்சியின்போது அரிதாகிப்போனார்கள். தன் வாழ்நாள் முழுவதும் தன் உணவு, உடை, இருப்பிட தேவைக்காக நடந்தே திரிவதால் இவர்கள்  நாடோடிகள், காலோடிகள், அலைகுடிகள், அல்லது மிதவைக் குடிகள் என்றும் மற்றவர்களால் அழைக்கப்படுகிறார்கள்.

மூலதனம் கிடைத்தால் முன்னேற்றம் நிச்சயம்
நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு சிலரே, வேட்டையாடும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். மற்றவர்கள் வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருள்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்கள், அலங்காரப் பொருள்களை   விற்பனை செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் செய்துவரும் தொழிலுக்குத் தேவையான மூலதனத்துக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்கி அல்லல்பட்டு வருகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு சலுகைகள் வழங்கினால் தொழில் செய்து முன்னேறுவோம் என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

‘‘நிலவின் ஒளியில் கண் அயர்ந்து, சூரியனின் சூடுபட்டு விழிக்கும் விளிம்பு நிலை மக்கள்.  இவர்களுக்கு பெயர் ‘நாடோடிகள்’’. குடுகுடுப்பைக்காரர்கள், பாம்பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள் என்று வினோத பெயர்களில் அழைக்கப்படும் இவர்களது வாழ்க்கை, நாதியற்ற நிலையில் வீதிகளில் தொடர்கிறது.

வாழ்க்கை மேம்பட கல்வி வழிவகுக்கும்
தொழிற்சாலைகளின் வளர்ச்சியினாலும், கிராமங்கள் நகரங்களாகி வருவதாலும், இயற்கை வாழ்வுக்கான பகுதிகள் சுருங்கி வருவதாலும், காடுகள் பயன்பாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும் நாடோடி மக்களின் வாழ்வு துன்பம் நிறைந்ததாக மாறி வருகிறது. இதனால்  மாண்பற்ற ஒரு வாழ்வுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான நாடோடி மக்கள், வட இந்திய மாநிலங்களில் வாழ்கின்றனர். சமூகம் கண்டு கொள்ளாத இவர்களின் வாழ்க்கை மேம்பட கல்வி மட்டுமே வழிவகுக்கும் என்பதும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்.

தனி ஒதுக்கீடு இருந்தால் விடியலுக்கு வழிபிறக்கும்
பழங்குடியினரில்  மலையாளிகள், குறும்பர், இருளர், தோடர், ஊராளி போன்றவர்கள் மட்டுமே அரசு  திட்டங்களால் பயன்பெறுகின்றனர். ஆனால் காட்டுநாயக்கன் என்ற பட்டியலில் உள்ள  பாம்பாட்டிகள், குருவிபிடிப்போர், குடுகுடுப்பைகாரர்கள், ஆதியன் என்ற  பெயரில் உள்ள பூம்பூம் மாட்டுக்காரர்கள், சோழகா என்ற பெயரில் உள்ள  பாம்பாட்டிகளால் அதனை பெற முடியவில்லை. எனவே நாடோடி இனத்தவருக்கு பிரன்மலை  கள்ளர்களுக்கு வழங்குவது போல், தனி ஒதுக்கீடு வழங்கினால் தான், அவர்கள்  வாழ்வில் முன்னேற முடியும் என்பது சமீபத்தில் மதுரையில் நடந்த தமிழக  நாடோடிகள் கூட்டமைப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அதை அரசு  பரிசீலித்து செயல்படுத்தினால் விடியலுக்கு வழி பிறக்கும் என்கின்றனர்  மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்.



Tags : nomads ,state ,streets , 'Nomads
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...