×

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

* கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்
* குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர திமுக வலியுறுத்த திட்டம்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தொடரில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர திமுக வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் தமிழக கவர்னர் சட்டப்பேரவையில் உரையாற்றுவார். கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம், 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நடைபெறும்.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த 24ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக கவர்னர், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174(1)ன்கீழ் சட்டப்பேரவை கூட்டத்தை 2020ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார். சட்டப்பேரவை மண்டபத்தில் அன்று காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார்” என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இந்த உரையில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் இடம்பெறும்.

கவர்னர் உரையாற்றி முடித்ததும் பேரவை கூட்டம் முடிவடையும். இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தி, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். 6ம் தேதி கூடும் பேரவை கூட்டம் 10ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. முன்னதாக சட்டப்பேரவையில் உரையாற்ற நாளை காலை 9.50 மணிக்கு வரும் தமிழக கவர்னரை, சபாநாயகரும், சட்டப்பேரவை செயலாளரும் வரவேற்று சட்டப்பேரவைக்குள் அழைத்து வருவார்கள்.6 மாதங்களுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை கூட உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து நேற்றுதான் இறுதி முடிவு வெளியாகியுள்ளது. இதில், ஆளும் அதிமுகவைவிட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மாதம் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது. இதனால், வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலுக்கு மூன்று நாட்களுக்கு முன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த தீர்மானத்தை உடனே சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோன்று நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினர் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடந்தையுடன் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாகவும், சட்டப்பேரவை கூட்டத்தில் குரல் எழுப்புவார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பேரவை கூட்டத்தில் வலியுறுத்துவார்கள். மேலும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சியினர் பிரச்னையை எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது. ஆளும் அதிமுகவைவிட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ளது.

Tags : Tamilnadu ,assembly elections ,Tamilnadu Legislative Assembly , Rural Local Elections, Tamil Nadu Legislative Assembly, Tomorrow
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...