×

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல சிகிச்சை படிப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ரங்கநாயகி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மனநல மருத்துவ சிகிச்சை தருபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய மனநல மையம் மற்றும் நரம்பியல் அறிவியல் மையம் கடந்த 2015-16ல் நடத்திய தேசிய மனநல ஆய்வில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு மனநல சிகிச்சை மருத்துவர் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனநல சிகிச்சை படிப்பில் போதுமான இடங்கள் இல்லை. குறைந்த அளவு இடங்களே உள்ளன. சென்னை ராஜிவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தவிர மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல சிகிச்சை படிப்பிற்கு 2 முதல் 4 இடங்களே உள்ளன.

இளம் வயதுள்ளவர்களில் 13 முதல் 17 வரையிலான வயதில் மனநோயால் பாதிக்கப்படும் அபாயம் 7.3 சதவீதம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 98 லட்சம் இளம் வயதினர் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு மனநல சிகிச்சை தேவையாக உள்ளது. மன அழுத்தத்தால் அதிக எண்ணிக்கையிலான போலீசார் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக மத்திய உள்துறை ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2010 முதல் 2014 வரை தமிழகத்தில் 166 போலீசார் தற்கொலை செய்துள்ளனர்.இதை சரிசெய்ய பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மனநலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மன நலம் தொடர்பான பாடங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். மேலும், அரசு மருத்துவ கல்லூரிகளில் மனநல சிகிச்சை பாடத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்க வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : state ,colleges ,governments , Government Medical College, Mental Health, Student, Count, Case, Central, State Government, iCord, Notice
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...