×

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம்: எடப்பாடி, ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் (74), நேற்று காலை காலமானார். அதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த பி.எச்.பாண்டியன் சேரன்மாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற கிராமத்தில் பிறந்தார்.சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 1968ல் வக்கீலாக பதிவு செய்தார். சேரன்மாதேவி தொகுதியில் 1977 முதல் 4 முறை எம்எல்ஏவாகவும், 1999-2004ல் எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக 1980-84ல் பதவி வகித்த இவர், 1985 முதல் 1989 வரை சபாநாயகராக பதவி வகித்தார். பேரவையில் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்பதை நிரூபித்தவர் என்ற பெருமையை பெற்றவர். இவரது மனைவி சிந்தியா பாண்டியன் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்தவர்.

இவருக்கு அர்விந்த் பாண்டியன், மனோஜ் பாண்டியன், நவீன் பாண்டியன், வினோத் பாண்டியன் என்ற 4 மகன்களும், தேவமணி என்ற மகளும் உள்ளனர். மறைந்த பி.எச்.பாண்டியனின் உடல் இன்று மாலை கீழ்ப்பாக்கம் பெரிய கல்லறையில்  அடக்கம் செய்யப்படுகிறது. முதல்வர், மு.க.ஸ்டாலின் அஞ்சலி: பி.எச்.பாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பி.எச்.பாண்டியன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் க.பொன்முடி எம்.எல்.ஏ.,  தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

தலைவர்கள் இரங்கல்:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்: தமிழ்நாடு சட்டப் பேரவையின் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான பி.எச்.பாண்டியன், உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு பி.எச்.பாண்டியன் மீது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததை நான் அறிவேன். அவரது மறைவு அரசியல் தலைவர்களுக்கு மட்டுமின்றி, வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பி.எச் பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக சட்ட ஆலோசகரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தோம். அவரின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறோம். மேலும் பொன்.ராதாகிருஷ்ணன் (முன்னாள் மத்திய அமைச்சர், பாஜக), ராமதாஸ் (பாமக நிறுவனர்),ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்) ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Death BH Pandian ,death ,Speaker ,Edappadi ,Stalin , Health, Former Speaker, PH Pandian, Death, Edappadi, Stalin, Anjali
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...