×

வாகன் இணையதளத்தில் குளறுபடி வாகனங்களை புதுப்பிப்பதில் சிக்கல்: வணிக வாகனங்களை இயக்குவோர் பாதிப்பு

சென்னை: மத்திய அரசின் ‘வாகன்’ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படாத வேகக்கட்டுப்பாட்டுக்கருவிகளை பொருத்திய வாகனங்களை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இப்பிரச்னை நீடிப்பதால், வாகன ஓட்டிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம், ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல், ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தல் போன்ற பணிகளும் இணையதளம் மூலம் மனு அளிக்கும் வசதி கொண்டுவரப்பட்டது. இது பொதுமக்களிடத்தில் வரவேற்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து வாகன் என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் ஒன்றிணைக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை விநியோகம் செய்யும் நிறுவனங்களின் விபரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான வாகனங்களில் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அந்த வாகனங்கள் புதுப்பிப்பதற்காக செல்லும் போது, திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் இப்பிரச்னை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது: போக்குவரத்து விதிமுறைகளின்படி ஆண்டுதோறும் வாகனங்களை புதுப்பிக்க வேண்டும். இதற்கு சாலை வரி, இன்சூரன்ஸ் செலுத்தியதற்கான ரசீது, புகை பரிசோதனை அறிக்கை, சர்வீஸ் செய்ததற்கான சான்று, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டதற்கான சான்று ஆகியவற்றை கொண்டு விண்ணப்பித்து, அதற்குறிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அப்போது ரசீது வழங்கப்படும். பிறகு ஒருவாரத்திற்குள் ஆர்டிஓ அலுவலகத்தில் சோதனை நடத்தப்படும். அங்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். சரியாக இருக்கும் பட்சத்தில் புதுப்பிக்கப்பட்டதற்கான சான்று வழங்கப்படும். ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், திருப்பி அனுப்பப்படும். இந்நிலையில் ஆர்டிஓ அலுவலகங்களில் தற்போது வாகன புதுப்பிப்பதற்காக செல்லும் வாகனங்களில் பெரும்பாலானவற்றில் மத்திய அரசின் வாகன் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படாத வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறி திருப்பி அனுப்பப்படுகிறது.

இதனால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். இதற்கு அரசின் முறையான அறிவிப்பின்மையே காரணம். அதாவது, எந்த நிறுவனத்தின் கருவி வாகன் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நிறுவனத்தின் வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும் என்பது குறித்த அறிவிப்புப்பலகை ஆர்டிஓ அலுவலகங்களில் வைக்கப்படவில்லை. இதனால் கடைகளில் கிடைக்கும் ஏதோ ஒரு வேகக்கட்டுப்பாட்டுக் கருவியை வாகன ஓட்டுனர்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள். தற்போது அந்தகருவி வாகன் இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி திரும்பி அனுப்பப்படுகிறது. எனவே முறையாக ஆர்டிஓ அலுவலகங்களில் அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நீடிக்கும் இப்பிரச்னையால் இரண்டுமுறை பணம் கொடுத்து வேகக்கட்டுப்பாட்டுக்கருவிகளை பொருத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vaughan ,commercial vehicle operators , Vaughan Internet, Troubleshooting, Problem, Commercial Vehicles, Impact
× RELATED ரோகித் ஷர்மாவின் கேப்டன்சி சுமாராக...