×

பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.78.39க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.72.28க்கும் விற்கப்படுகின்றன. கடந்த 12 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ஒருநாள் கூட குறையாமல், தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. கடந்த டிசம்பர் 25ம் தேதி 77.58 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களில் லிட்டருக்கு 81 காசுகள் அதிகரித்து ரூ.78.39 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை இதே காலத்தில் லிட்டருக்கு ரூ.1.46 உயர்ந்து இப்போது ரூ.72.28 ஆக உள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாத கடைசி வார நிலவரத்திற்கு பிந்தைய 15 மாதங்களில் மிக அதிக விலையாகும். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் துறைகளும், விவசாயமும் மிக மோசமான பின்னடைவுகளை சந்திப்பது உறுதி. மேலும், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகள் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானில் பதற்றம் தணிக்கப்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை பழைய உச்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொடக்கூடும். இந்தியாவில் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்வது நன்மை பயக்காது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Ramadas , Petrol prices, reduce, ramadas, insistence
× RELATED தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்...