×

ஈரானுடன் போர் மூளும் அபாயம் அதிகரிப்பு வளைகுடா நாடுகளில் அமெரிக்க படைகள் குவிப்பு: சுலைமானி இறுதிச்சடங்கிலும் டிரோன் தாக்குதல்

பாக்தாத்: அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில், ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி கொல்லப்பட்ட அடுத்த நாளே, ஈராக்கில் நடந்த அவரது இறுதிச் சடங்கு அணிவகுப்பில் மீண்டும் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு படிப்படியாக மோசமடைந்து வருகிறது. ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ படை மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சி படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் சமீபத்தில் சூறையாடப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஈராக்கை சேர்ந்த ஹசத் அல் ஷாபி துணை ராணுவப் படையும், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையும் இணைந்து அமெரிக்க தூதரகத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக தெரிந்தது. இவ்விரண்டு படையும், ஈரானுக்கு மிக நெருக்கமானவை. மேலும், அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஈரான் ராணுவத்தின் துணை படையான புரட்சிகர பாதுகாப்பு படையின் குத்ஸ் பிரிவும், கிளர்ச்சி படைகளுடன் சேர்ந்து அமெரிக்க மக்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் உளவுத் தகவல்கள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து, ‘நிழல் போர்’ தொடங்கி விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் ராணுவ தளபதியும், மத்திய கிழக்கின் நாடுகளின் சக்தி வாய்ந்த நபருமான காஸ்சிம் சுலைமானி, ஹசத் அல் ஷாபியின் துணை தலைவர் அபு மகதி அல் முகான்திஸ் மற்றும்  அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தீவிரவாதி உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர். இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஈராக்கில் நேற்று மீண்டும் ஒரு ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கொல்லப்பட்ட சுலைமானி மற்றும் அபு மகதியின் இறுதிச் சடங்கு ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள நாஃப்பில் நேற்று நடந்தது. இதற்காக பாக்தாத்தில் இருந்து அமைதி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கார் அணிவகுப்பில் திடீரென ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசப்பட்டன. இதில் ஏராளமான கார்கள் தீப்பிடித்தன.
இத்தாக்குதலை அமெரிக்கா நடத்தியதா என்பது குறித்தும் உறுதி செய்யப்படவில்லை.

உலக நாடுகள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்ட பிறகும் கூட, அடுத்தடுத்த நாட்களில் ஈராக்கில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால் போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளில் தனது படையை அதிகரித்து வருகிறது. ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக 750 ராணுவ வீரர்களை பாக்தாத்துக்கு அனுப்பிய அமெரிக்கா, சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக 3,500 வீரர்களை குவைத்துக்கு அனுப்பி உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் ஏற்கனவே அமெரிக்காவின் 14 ஆயிரம் வீரர்களை கொண்ட மிகப்பெரிய ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஈராக்கில் மட்டும் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். அமெரிக்காவின் ராணுவ குவிப்பு, ஈரானுடன் போர் மூள்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதேநேரம், ஈரானின் துணை ராணுவ படையினர் கைவரிசை காட்டாமல் இருப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஈரான் ஆதரவு படைகள் சில தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ‘அமெரிக்காவுக்கு மரணம்’
இறுதிச்சடங்கில் கோஷம்
ராணுவ தளபதி சுலைமானி, ஈராக் படையின் துணைத் தலைவர் அபு மகதியின் இறுதிச் சடங்களில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர். ஈரான், ஈராக் நாட்டு கொடிகளும், கிளர்ச்சி படைகளின் கொடிகளும் இறுதி ஊர்வலத்தில் பறக்க விடப்பட்டன. மேலும், ‘அமெரிக்காவுக்கு மரணம்’ என ஊர்வலத்தில் மக்கள் கோஷமிட்டபடி சென்றனர். பாக்தாத்தின் வடக்கில் உள்ள தாஜி பகுதியில்தான் நேற்று மீண்டும் வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 வாகனங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 5 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

* பெட்ரோல், தங்கம் உச்சத்தை தொடும்
சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினமே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% அதிகரித்தது. அதேபோல தங்கமும் அதிரடியாக விலை உயர்ந்தது. இதற்கிடையே அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் பட்சத்தில் பெட்ரோல் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவை பொறுத்த வரையில் ஈராக்கிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. எனவே, போர் ஏற்பட்டால், இங்கு கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும். இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 வரை எகிறக் கூடும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை ஏற்கனவே சவரன் ரூ.30,000 தாண்டி விட்ட நிலையில் மேலும் உச்சத்தை தொடும் என்றும் கூறப்படுகிறது.

* போர் நடக்காமல் இருக்க தாக்குதல் நடத்தினோம்
சுலைமானியை கொன்ற அமெரிக்க படைக்கு பாராட்டு தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ‘‘அமெரிக்க தூதர்கள் மற்றும் படைகளுக்கு எதிராக சுலைமானி மற்றும் கிளர்ச்சி படையினர் இணைந்து மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டது தெரியவந்ததாலேயே அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இது போரை தொடங்குவதற்கான தாக்குதல் அல்ல. போரை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையாகும்’’ என்றார். இதே கருத்தையே கூறிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர் ஓ பிரையன், ‘‘இது போரை தடுப்பதற்கான தாக்குதல். ஈரானுடன் எந்த நேரத்திலும் எந்த முன்நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் தயாராக இருந்தார். அவர் அமைதிக்கான தீர்வையே விரும்பினார். துரதிருஷ்டவசமாக அவர்கள் அதற்கான வாய்ப்புகளை முறியடித்தனர்,’’ என்றார். மேலும், சுலைமானியின் உத்தரவுப்படியே ஈராக்கில் அமெரிக்க ராணுவம் மீதும், தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

Tags : forces ,US ,countries ,Gulf ,drone strike ,Suleimani ,funeral , Iran war, danger, Gulf nation, US forces, Sulaimani final, drone attack
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...