×

வெற்றி பெற்ற வேட்பாளரை தோல்வி என அறிவித்ததால் பெண் தீக்குளிக்க முயற்சி: விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம், விளாங்காட்டூர் ஊராட்சியில் 2 ஆயிரத்து 294 வாக்குகள் பதிவானது. இதில் தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வீரமுத்துக்கு 776 வாக்குகளும், ஏணி சின்னத்தில் போட்டியிட்ட பாலகிருஷ்ணனுக்கு 703 வாக்குகளும் கிடைத்தது. இதையடுத்து வீரமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற வீரமுத்து காத்திருந்த போது, திடீரென 703 வாக்குகள் பெற்ற பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமுத்து கேட்டபோது எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் என அலட்சியமான பதிலை தேர்தல் அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி தெரிவித்துள்ளார்.  

உடனே வேட்பாளர் வீரமுத்து ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சப்கலெக்டர் பிரவீன்குமாரிடம் புகார் கூறினார். அதற்கு அவர் கலெக்டரிடம் தெரிவிக்கும்படி கூறியதாக தெரிகிறது.  இதனால் ஆத்திரம் அடைந்த வேட்பாளர் வீரமுத்து மற்றும் கிராமமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் கவியரசு, டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு பெண் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். உடனே போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் சமாதானத்தை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர்.

Tags : candidate ,set fire , Success, Candidate, Failure, Woman, Trying to Fire, Survival
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்