×

மதுரையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரிடம் துப்பாக்கி முனையில் 170 பவுன் கொள்ளை: போலீஸ் எனக்கூறி பெண் உட்பட 5 பேர் கும்பல் துணிகரம்

மதுரை:  போலீஸ் எனக்கூறி பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரிடம், 170 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.80 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, கூடல்புதூர், அப்பாதுரை நகரை சேர்ந்தவர் குணசேகரன். பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர், கடந்த டிச.27ம் தேதி குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது காலை 9 மணியளவில் ஒரு பெண் உட்பட 5 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள், தங்களை ‘போலீஸ்’ என அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர், ‘‘வீட்டில் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருப்பதாக ரகசிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. சோதனையிட வேண்டும்’’ என கூறியுள்ளனர். இதை கேட்ட குணசேகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் 5 பேரும் தனித்தனியாக குணசேகரன் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சோதனையிட்டனர். அப்போது கும்பலில் ஒருவர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குணசேகரனை மிரட்டி பீரோவை திறக்குமாறு கூறினார். பீரோவை திறந்ததும் அதிலிருந்த 170 பவுன் தங்க நகைகள், ரூ.2.80 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பல், ஒப்பந்ததாரர் குணசேகரன் மற்றும் அவரது மனைவியை காரில் ஏற்றி கடத்தி சென்றது. மதுரை ஒத்தக்கடை அருகே காரை நிறுத்தி இருவரையும் இறக்கிவிட்டு கும்பல் தப்பியது.

இதையடுத்து குணசேகரன் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூர் போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்யவில்லை. நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, குணசேகரன் வீட்டில் உள்ள 5 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற காட்சிகள் கிடைத்துள்ளன. இதன்பேரிலும், கணவர், மனைவி இருவரையும், கும்பல் கடத்திய கார் சென்ற வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையரை பிடிக்க துணை கமிஷனர் பழனிக்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.20 லட்சம் மதிப்பு ஆவணங்கள் மாயம்:
கொள்ளைக்கும்பல் நகைகள், பணத்துடன் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளையும் அள்ளிச் சென்றுள்ளது. எனவே, தொழில் போட்டியில் இந்த கொள்ளைச்சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மேலும், கடந்த ஆண்டு மேலூரில் துப்பாக்கி முனையில்தான் ஒரு டாக்டர் வீட்டில் நகைகள், பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரருக்கும் தொடர்பிருந்தது. இந்நிலையில், அந்த கொள்ளைக்கும்பலுக்கும், இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags : burglary ,Madurai ,contractor ,men , Madurai, Public Works, Firearms, 170 Bound Robbery, Police, Woman, 5 People
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...