×

க.பரமத்தி வாக்கு எண்ணும் மையத்தில் ஆளுங்கட்சியினரிடம் பேரம் பேசி திமுக வெற்றியை பறித்த பெண் அதிகாரி: எம்எல்ஏ செந்தில்பாலாஜி வெளியிட்ட வீடியோ ஆதாரத்தால் பரபரப்பு

கரூர்: க.பரமத்தி வாக்கு எண்ணும் மையத்தில் திமுக வெற்றியை மறைத்து, அதிமுகவிடம் பேரம் பேசி வெற்றி பெற்றதாக பெண் அதிகாரி அறிவிக்கும் வீடியோவை எம்எல்ஏ செந்தில் பாலாஜி வெளியிட்டார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் 1வது வார்டு வாக்கு எண்ணிக்கை க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடியும் போது திமுக வேட்பாளர் 41 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் அந்த மையத்தில் இருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, அதிமுக முகவர்களை திடீரென அழைத்து பேசினார். இதையடுத்து அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பான வீடியோ ஆதாரத்தை கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி மற்றும் ஜோதிமணி எம்.பி. ஆகியோர் நேற்று முன்தினம் வெளியிட்டனர். அந்த வீடியோவில், ‘‘ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதா வாக்குசாவடியில் உள்ள அதிமுக முகவர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து, இப்போ அவங்க (திமுக) 1107 ஓட்டு வாங்கி இருக்காங்க.. நீங்க (அதிமுக) 1066 வாங்கி இருக்கீங்க.. இரண்டுக்கும் வித்தியாசம் 41 தான். உங்களோட ஒப்பீனியன் சொல்லுங்க.. ஆர்ஓ (தேர்தல் நடத்தும் அதிகாரி தனசேகரன்) கிட்ட பேசிடலாம்’’ என்று கூறுகிறார்.

இந்த ஆதாரத்தை வெளியிட்ட பிறகு எம்எல்ஏ செந்தில்பாலாஜி, ஜோதிமணி எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படாத திட்ட இயக்குநர் கவிதா அங்கு சம்பந்தமில்லாமல் வந்து அதிமுகவினரை சந்தித்து பேசி கருத்து கேட்டு தேர்தல் அதிகாரி போல் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்துள்ளார். இது ஒரு உதாரணம்தான். இதுபோன்று மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றனர்.

Tags : woman officer ,K.Paramat ,victory ,party ,DMK ,governor ,Baramati ,polling center , K.Paramat, The Voting Counter, Governance, Bargaining, DMK Success, Female Officer
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...