×

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடையே போட்டியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, கிரிக்கெட் விளையாடி அசத்தினார். சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மெரினா கிரிக்கெட் மைதானத்தில், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச முதல்வர் பேட்டிங் செய்தார். முதல்வர் பேன்ட், சட்டையுடன் விளையாட்டு ஷூ அணிந்து விளையாட்டு வீரர் போல் காட்சி அளித்தார். ஜெயக்குமார் போட்ட பந்தை முதல்வர் எடப்பாடி லாவகமாக அடித்து அசத்தினார். போட்டியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்தையும், ஒரு கட்டுக்கோப்பான உடலையும் வளர்த்து கொள்வதற்கு மிக முக்கியம். அதுவும், உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு பணிச் சுமைகள் இருக்கிறது. அந்த பணிச்சுமைகள் எல்லாம் குறைய வேண்டுமென்று சொன்னால், விளையாட்டிலே நீங்கள் ஆர்வம் கொண்டு விளையாடுகிறபொழுது, மனதில் இருக்கின்ற அழுத்தம் குறையும், மகிழ்ச்சி கூடும், உங்களது பணி சிறக்கும். எந்த வயதானாலும் விளையாடலாம்’’ என்றார்.

* ஐஏஎஸ் அணி வெற்றி
ஐஏஎஸ் - ஐபிஎஸ் இடையே நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஐஏஎஸ் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் மற்றும் திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனின் சிறப்பான ஆட்டத்தால், 22 ஓவருக்கு 7 விக்கெட் மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்தனர். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐபிஎஸ் அணியினர் களம் இறங்கினர். ஆனால் ஐஏஎஸ் அணியினரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 102 ரன்னில் ஐபிஎஸ் அணியினர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 62 ரன்னில் தோல்வியை தழுவினர். வெற்றிபெற்ற மகிழ்ச்சியை ஐஏஎஸ் அதிகாரி கேப்டன் தீரஜ்குமார் தலைமையிலான அணியினர் நடனமாடி கொண்டாடினர். இன்று நடக்கும் போட்டியில் ஐஎஸ்எஸ் - ஐஆர்எஸ் (ஐடி) அணிகளும், ரயில்வே - ஐஆர்எஸ் (வருமானவரித்துறை) அணிகளும் மோதுகின்றன. இறுதிபோட்டி பிப்.9ம் தேதி நடக்கிறது.

Tags : Edappadi Palanisamy ,IPS ,IAS , IAS, IPS Officer, Competition, Beginning, Chief Minister Edappadi Palanisamy, Cricket
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு