×

ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி நண்பர்களுடன் சந்திப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி: படித்த பள்ளியில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி நண்பர்களுடனான சந்திப்பு என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 1970ம் ஆண்டு படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் 1965ம் ஆண்டு முதல் 1970 வரை இந்த பள்ளியில் படித்து இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கு பெற்றிருந்தார்.

இந்த நிலையில் மாணவர்கள் சந்திப்பில் 2ம் நாள் நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். அவர் தான் பயின்ற வகுப்பறைகளையும், பள்ளி வளாகத்தையும் பார்வையிட்டார். பின்னர் தனது ஆசிரியர்களையும்-பள்ளி நண்பர்களையும் சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அவர்களிடம் தனது பள்ளிக்கால அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பள்ளி பருவத்தில் நடைபெற்ற சம்பவங்களையும் நினைவு கூர்ந்து சிரித்து பேசி அவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கே: உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்களே? உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதால் பரபரப்பு ஒன்றும் இல்லை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். இந்த மகிழ்ச்சியை நான் படித்த என்னுடைய பழைய மாணவர்கள், என்னைப் பயிற்றுவித்த ஆசிரியர்களோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நடந்து முடிந்திருக்கக்கூடிய இந்தத் தேர்தலை பொறுத்தவரை, எனக்கு சிறப்பான ஊக்கம் தரக்கூடிய அளவுக்கு எல்லோரும் வாழ்த்துகளைச் சொன்னார்கள். அந்த வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டேன். அதுமட்டுமின்றி சக மாணவர்களோடு பழகக்கூடிய, 50 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதை என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நீங்கள், எதுபோன்ற தகவல்களைப் பரிமாறிக் கொண்டீர்கள்?
பழைய நினைவுகள். ‘மலரும் நினைவுகள்’என்று சொல்வார்களே, அதுபோன்று பழைய நினைவுகளை. எங்கெங்கு படித்தோம், எந்தெந்த வாத்தியாரிடம் அடிவாங்கினோம், எப்படி ஸ்கூலை ‘கட்’ செய்தோம், எப்படி ஸ்கூலுக்கு பென்சில் வாங்கப் போனோம், எங்கெங்கே விளையாடினோம் என்பதையெல்லாம் பகிர்ந்து கொண்டோம்.

உங்கள் வகுப்பறைக்கு சென்று பார்த்தீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
6ம் வகுப்பில் இங்கு சேரும் போது 6 ஏ தமிழ்ப் பிரிவில் சேர்ந்தேன். அந்த வகுப்பையும், 7ஏ வகுப்பையும் பார்த்தேன். அந்த இடம் தற்போது கிண்டர் கார்டனாக மாறி உள்ளது. அதன்பிறகு இப்போது உள்ள ஹெட்மாஸ்டர் அனைத்தையும் சுற்றிக் காண்பித்தார். ஓரளவிற்குதான் மாறி உள்ளதே தவிர மற்றபடி முன்னர் இருந்தது போன்றே பராமரித்து வருகிறார்கள். மேயர் மூலமாக சேர்க்கப்பட்டீர்கள். நீங்கள் மேயராகவும் இங்கு வந்திருக்கிறீர்கள். இந்த அனுபவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள். இப்போது மேயராக வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக வந்துள்ளேன். இதற்கு முன்னர் மேயராக, எம்.எல்.ஏ.வாக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக வந்துள்ளேன். நாளைக்கு எப்படி வருவேன் என்பதைப் பிறகு சொல்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags : Meeting ,Friends , Fifty years, school friend, meeting, educated school, mc stalin, elasticity
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்