×

குருத்வாரா மீது தாக்குதலா? வதந்தி என்கிறது பாகிஸ்தான்

சண்டிகர்: பாகிஸ்தானில் உள்ள நன்கனா சாகிப் குருத்வாரா மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அப்படிப்பட்ட சம்பவம் நடக்கவே இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கனா சாகிப் என்ற இடத்தில் சீக்கியர்களின் முதல் மதகுருவான குருநானக் தேவ் பிறந்தார். அவர் நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. இதில் பணியாற்றும் சீக்கிய அதிகாரியின் மகளை, அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, பெண்ணின் சகோதரர் ஒருவர் சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபரும், அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்களும் நேற்று முன்தினம் அப்பகுதி சீக்கியர்கள் மீதும், குருத்வாரா மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு மத்திய அரசும், பஞ்சாப் முதல்வர்அமீரிந்தர் சிங் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், குருத்வாராக்களை நிர்வகிக்கும் சிரோன்மணி குருத்துவார பிரபந்தக் கமிட்டி, இது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 4 பேர் கொண்ட குழுவினர் பாகிஸ்தான் செல்ல உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் காங்கிரஸ் இளைஞர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘டீக்கடையில் நடந்த மோதலால் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த 2 குழுக்கள் மோதிக்கொண்டன.இதில் போலீசார் தலையிட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். இதை மதரீதியான தாக்குதல் என வதந்தி பரப்பும் முயற்சிகள் நடக்கின்றன. குருத்வாராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

* ராகுல் கண்டனம்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விடுத்துள்ள அறிக்கையில், ‘நன்கனா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சகிப்புத்தன்மை இன்மை அபாயகரமானது. இது பழங்கால விஷம். இதற்கு எல்லைகள் கிடையாது. அன்பும், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுமே சகிப்புத்தன்மை இன்மைக்கு மாற்று மருந்து,’ என கூறியுள்ளார்.

* பாக். போலீஸ் விளக்கம்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் கூறுகையில், ‘‘முஸ்லிம் வாலிபர் ஒருவர் சீக்கிய பெண்ணை திருமணம் செய்தார். அந்தப் பெண்ணை மதமாற்றம் செய்ய வாலிபரின் குடும்பம் வற்புறுத்துவதாக பெண் வீட்டார் புகார் அளித்தனர். இதன் பேரில், போலீசார் அந்த வாலிபரின் குடும்பத்தினர் சிலரை கைது செய்தனர். இதை கண்டித்து முஸ்லிம்கள் குருத்வாரா முன்பு தர்ணா செய்தனர். அவ்வளதுதான்,’’ என்றனர்.

Tags : Gurudwara ,Pakistan , Gurdwara attack? Rumor, Pakistan
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...