×

சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கிய புகாரில் விசாரணை நடத்த முடியாமல் ஊழல் தடுப்பு போலீஸ் தவிப்பு

பெங்களூரு: சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியது தொடர்பான புகாரில் பறிமுதல் செய்த பொருட்கள் ஆய்வுக்காக தடயவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வு அறிக்கை இதுவரை கிடைக்காததால் புகார் மீதான விசாரணையை நடத்த முடியாமல் ஓராண்டுக்கும் மேலாக ஊழல் தடுப்பு போலீசார் தவித்து வருகிறார்கள். கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக இருந்த டி.ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தியபோது, சிறையில் உள்ள சசிகலாவுக்கு விதிமுறைகள் மீறி பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி வரை பணபரிமாற்றம் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். சசிகலாவுக்கு சலுகை வழங்கியதில் சிறை கண்காணிப்பாளராக இருந்த சத்யநாராயண ராவுக்கு தொடர்புள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். டிஐஜி ரூபாவின் இந்த குற்றச்சாட்டு பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்புகார் தொடர்பான விசாரணையை ஊழல் தடுப்பு படை(ஏசிபி)யிடம் மாநில அரசு ஒப்படைத்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஏசிபி போலீசார், சிறையில் சோதனை நடத்தி வீடியோ உள்பட சில பொருட்களை பறிமுதல் செய்தனர். அவை பெங்களூரு மடிவாளாவில் இயங்கிவரும் தடயவியல் ஆய்வு மையத்திற்கு (எப்எஸ்எல்) அனுப்பி வைக்கப்பட்டது. தடயவியல் ஆய்வு மையத்திற்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் அனுப்பிய பொருட்கள் இன்னும் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்காமல் இருப்பதால், விசாரணையை முடிக்க முடியாமல் தவித்து வருவதாக மூத்த ஏசிபி அதிகாரிகள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர். தடயவியல் அறிக்கை கிடைத்தால், உடனடியாக விசாரணை நடத்தி முடிக்க தயாராக இருப்பதாகவும் ஏசிபி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Tags : Sasikala , Sasikala, Prison, Concession, Investigation, Prevention of Corruption, Police
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...