×

நர்ஸ் முகத்தில் வெந்நீர் ஊற்றிய கணவன் கைது

சென்னை: அமைந்தகரை கதிரவன் காலனியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (60). இவரது மனைவி நிர்மலாமேரி (53), அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். தம்பதி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்தோணிராஜ், அடுப்பில் இருந்த சுடுநீரை எடுத்து வந்து மனைவி முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் முகம் வெந்து வலியால் நிர்மலாமேரி அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜை கைது செய்தனர்.

* முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் வைபை பூஸ்டரை சீரமைப்பது போல் நடித்து, ஒரு அறையில் இருந்த 2 செல்போனை திருடி சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
* அயனாவரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் காந்திராஜன் (35). இவருக்கும், அயனாவரம் மாட வீதியை சேர்ந்த இவரது மாமனார் பிரபாகர் என்பவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபாகரன் மறைத்து வைத்திருந்த பிளேடால் மருமகன் கழுத்தை அறுத்துள்ளார். படுகாயமடைந்த காந்திராஜனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
* திருவல்லிக்கேணி புது தெருவை சேர்ந்த ஐஸ்வர்யா (23) என்பவர் வீட்டில் இருந்து 4 சவரன் செயின், ரூ.16 ஆயிரத்தை திருடிய, வீட்டு வேலைக்காரியான அதே பகுதியை சேர்ந்த பவுசியா (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் ஜீப் மோதி 4 பேர் கால் முறிந்தது:
போரூர் காவல் நிலைய தலைமை காவலர் கோபி மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த அசோக் ஆகிய 2 பேரும் நேற்று இரவு போரூர் சக்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப், அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதிவிட்டு, ஒரு பைக் மற்றும் கார் மீது மோதி நின்றது. இதில் பேருந்துக்காக காத்திருந்த தினேஷ்குமார், அஜித்குமார், கஸ்தூரி, மனோஜ்குமார் ஆகியோரின் கால்களில் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து, போரூர் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர்கள் சங்கரநாராயணன், சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜீப்பை எடுக்க விடாமல் தடுத்தனர். போலீஸ் ஜீப்பில் பிரேக் பிடிக்காததால், விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Tags : nurse , Nurse face, hot water, husband, arrested
× RELATED சைரன் விமர்சனம்