×

கார்-கூரியர் வேன் நேருக்கு நேர் மோதல்: கவரிங் நகை வியாபாரிகள் உள்பட 3 பேர் பரிதாப பலி

ஆத்தூர்: கோவை டவுன் ஹால் பகுதியை சேர்ந்தவர்கள் வரதராஜ் (40), பாலசுப்ரமணியம் (45). இவர்கள் இருவரும் அதே பகுதியில் சொந்தமாக கவரிங் நகை கடை வைத்துள்ளனர். கடைக்கு தேவையான கவரிங் நகைகளை தாங்களே தயாரித்து வந்தனர். மேலும் வெளியூர்களில் ஆர்டர் எடுத்தும் கவரிங் நகைகளை செய்து கொடுத்து வந்தனர். பெரும்பாலும் சென்னையில் உள்ள கவரிங் நகை கடை களில் ஆர்டர் எடுத்து தொழில் செய்து வந்தனர். இதன்படி, சென்னையில் இருந்து வந்த ஆர்டர்களின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு கவரிங் நகைகளை காரில் எடுத்து கொண்டு வரதராஜூம், பாலசுப்ரமணியமும் சென்னைக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் ரமேஷ் (30) என்பவர் ஓட்டி சென்றார். சென்னையை சென்றடைந்த அவர்கள், அங்கு கவரிங் நகைகளை விற்பனை செய்து விட்டு மீண்டும் நேற்று இரவு அதே காரில் கோவைக்கு புறப்பட்டனர்.

இந்த கார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. தென்னங்குடிபாளையம் பகுதியில் வந்தபோது, எதிரே கோவையில் இருந்து சென்னைக்கு கூரியர் களை ஏற்றி கொண்டு சென்ற தனியார் கூரியர் வேன் எதிர்பாராதவிதமாக கார் மீது அதிபயங்கரமாக மோதிவிட்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கூரியர் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இந்த விபத்து பற்றி அறிந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் அவ்வழியே வாகனத்தில் வந்தவர்கள் விரைந்து வந்து, காரில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த வரதராஜ், பாலசுப்ரமணியத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வரதராஜ் மற்றும் பாலசுப்ரமணியம் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய கூரியர் வேன் டிரைவரை தேடி வருகின்றனர். கார்-வேன் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Car-courier van ,Accident , Accident
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...