×

மதுரையில் போலீஸ் என கூறி துணிகரம்: அரசு ஒப்பந்ததாரரிடம் 170 பவுன் கொள்ளை

மதுரை: போலீஸ் எனக்கூறி பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் அரசு ஒப்பந்ததாரரிடம் 170 பவுன் நகை மற்றும் ரூ.2.80 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கூடல்புதூர் அப்பாதுரை நகரை சேர்ந்தவர் குணசேகரன், பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர், கடந்த டிச.27ம் தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது காலை 9 மணியளவில் பெண் உட்பட 5 பேர் குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் ‘தங்களை போலீஸ்’ என அறிமுகப்படுத்தி கொண்டனர். வீட்டில் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருப்பதாக ரகசிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே வீட்டில் சோதனையிட வேண்டும் என கூறியுள்ளனர். இதை கேட்ட குணசேகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் 5 பேரும் தனித்தனியாக குணசேகரன் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சல்லடை போட்டு தேடியுள்ளனர். இந்த சோதனை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. இதில் எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை. இதனால், அந்த கும்பல் விரக்தியடைந்தது.

அப்போது கும்பலை சேர்ந்த ஒருவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குணசேகரனை மிரட்டியுள்ளார். இதனால் குணசேகரன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த கும்பல், ஒப்பந்தாரரிடம், பீரோவை திறக்கக் சொல்லியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தான் வந்திருப்பவர்கள் போலீஸ் அல்ல, கொள்ளை கும்பல் என்பது குணசேகரனுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பீரோவை திறப்பதை தவிர வேறு வழி இல்லாததால் பீரோவை திறந்துள்ளார். அதிலிருந்த 170 பவுன் தங்க நகை, ரூ.2.80 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பல், ஒப்பந்ததாரர் குணசேகரன் மற்றும் அவரது மனைவியை காரில் ஏற்றி கடத்தி சென்றது. வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் இருவரையும் இறக்கிவிட்டு கும்பல் தப்பி சென்றது.

கொள்ளை கும்பலிடம் இருந்து தப்பிய குணசேகரன் உடனே கூடல்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, அரசு ஒப்பந்ததாரரிடம் வீட்டில் உள்ள 5 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், 5 பேர் கொண்ட கும்பல் அரசு ஒப்பந்ததாரர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தது சென்றது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : robbery , Robbery
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...