×

பேராவூரணி பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம்

* மூட நம்பிக்கையென மருத்துவர் தகவல்
* நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை
பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் நோய்கள் குணமாகும் என்று கூறி கழுதை பாலை பொதுமக்கள ஆர்வமுடன் வாங்கி செல்கினற்னர். கழுதை பால் குடித்தால் நோய்கள் தீரும் என்று கூறுவது மூடநம்பிக்கையென டாக்டர் தெரிவித்தார். பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கழுதைகளுடன் வந்து முகாமிட்டுள்ளனர். இவர்களிடம் 100க்கும் மேற்பட்ட ஆண், பெண், குட்டி கழுதைகள் உள்ளன. இவர்கள் பல குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று கழுதைப்பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சங்கு கழுதைப்பாலின் (50 மில்லி) விலை ரூ.50 என விற்கின்றனர்.

அப்போது கழுதை பாலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். கழுதை பால் அருந்தினால் இருமல், இளைப்பு, ஆஸ்துமா, சிரங்கு, புண், மஞ்சள்காமாலை, சிறு குழந்தைகள் கல், மண் சாப்பிடுவதால் ஏற்படும் உபாதைகள், வெள்ளை, வெட்டை, சோர்வு, சோகை உள்ளிட்ட நோய்கள் குணமாகும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் பிறந்து 3 நாளான குழந்தைகள் முதல் 100 வயது முதியவர் வரை கழுதைப்பால் சாப்பிடலாம் என்கின்றனர்.இதுகுறித்து கழுதை பால் வியாபாரியான தொழுதூர் சிவா கூறுகையில், கழுதை பால் மருத்துவ குணம் கொண்டது. நாங்கள் பரம்பரை பரம்பரையாக இதை தொழிலாக செய்து வருகிறோம். 100க்கும் மேற்பட்டோர் கால்நடையாக ஒவ்வொரு பகுதியாக சென்று 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை முகாமிட்டு கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் கழுதைப்பால் குடித்தால் ஜீரண சக்தி குறைபாடு, மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் வராது. சிறிய குழந்தைகள் ஒரு சங்கு, பெரியவர்கள் என்றால் இரண்டு சங்கு பால் கொடுக்க வேண்டும். பாலில் கலப்படம் இல்லாமல் பொதுமக்கள் கண்முன்னேயே கரந்து நுரையோடு நேரடியாக சூடு மாறாமல் தருகிறோம்.

30 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக பல்வேறு ஊர்களுக்கு சென்று இந்த தொழிலை செய்து வருகிறோம். பசு மாடுகளை எவ்வாறு கண்காணிப்போமோ, அதேபோல குளிப்பாட்டி சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துள்ளோம். கால்நடை மருத்துவரிடம் காட்டி கழுதைக்கு நோய்தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம் என்றார்.இதுகுறித்து கால்நடை மருத்துவர் கண்ணனிடம் கேட்டபோது, ஆடு, மாடு ஆகியவற்றின் பால் போல தான் கழுதையின் பாலும். கழுதை பால் சாப்பிட்டால் நோய் குணமாகும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றார்.தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வரும், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவருமான சிங்காரவேலிடம் கேட்டபோது, பிறக்கும் குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரை கட்டாயமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒரு வருடம் கழித்த பிறகு தான் பசும்பாலே கொடுக்க வேண்டும்.

கழுதைப்பால் ஒருமுறை அருந்தும் குழந்தைகள், சுவை மாறுபாடு உணர்ந்து தாய்ப்பாலை அருந்தாமல் போகும் அபாயம் உள்ளது. கழுதை பால் குடிப்பதால் நோய்கள் குணமாகும் என்பது வடிகட்டிய மூடத்தனம் தான். பசும்பால் குடிப்பதால் நோய் குணமாகிறதா அதுபோல தான் கழுதைப்பால் குடிப்பதும். கழுதை பால் கொடுத்து அலர்ஜி ஏற்பட்டால் குழந்தைகளுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தாய்ப்பால் தவிர வேறு ஏதும் குழந்தைகளுக்கு தரக்கூடாது. கழுதை பால் குடிப்பதால் நோய் குணமாகும் என்பது பொய். எனவே பொதுமக்கள் இதுபோன்ற தவறான, அறிவியல் பூர்வமான ஆதாரமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றார்.

Tags : area ,Peravurani ,Donkey milk sale , Donkey milk,sale, Peravuran, area
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு