×

வால்பாறை மலைப்பாதையில் விதிமீறி நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரில் இருந்து வால்பாறை செல்லும் மலைபாதையில் ஆங்காங்கே விதி மீறி நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்து வால்பாறை மற்றும் அதன் அடிவாரத்தில உள்ள ஆழியார், குரங்கு அருவிக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஆழியார் மற்றும் வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

 சுற்றுலா வாகனங்களில் வரும் சில பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை காணும் ஆர்வத்தில், மலைப்பாதையில் ஆபத்தான வளைவுகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு உணவு உண்பது, செல்பி எடுப்பதும், தொடர்ந்து நடந்து வருகின்றது.
குறிப்பாக ஆழியார் அணையை ஒட்டிய பகுதிகள் மற்றும் 9வது கொண்டை ஊசி வளைவு காட்சி முனை பகுதி போன்ற இடங்களில் வாகனங்கள் விதி மீறி நிறுத்தப்படுவதால், பேருந்து மற்றும் சரக்கு லாரிகள் இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, 40 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட வால்பாறை மலைப்பாதையில், வனத்துறை மற்றும் போலீசார் ரோந்து சென்று, விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும், விதி மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : ACCIDENT ,VALABAR HILLS , TOURISM VEHICLES , VALABAR HILLS,RISK, ACCIDENT
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...