×

ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்றபோது கர்ப்பிணிக்கு வயல்வெளியில் பிரசவம்: விவசாய பெண்கள் பிரசவம் பார்த்தனர்

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சென்ற கர்ப்பிணிக்கு வயல்வெளியில் பிரசவம் நடந்தது. விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(25). இவரது மனைவி சோனியா(22). இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். சோனியா 3 வது முறையாக கர்ப்பமானார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

 பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நரியம்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர்.
நரியம்பட்டு அடுத்த ரகுநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சோனியாவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டு துடித்தார். இதனால் சாலையோரம் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனே அவரை சாலையோரம் உள்ள வயல்வெளிக்கு அழைத்து சென்றனர். அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்கள் சோனியாவுக்கு பிரசவம் பார்த்தனர்.

மேலும், மருத்துவமனை ஊழியர்களும் உடனிருந்தனர். சோனியா சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர், சோனியாவையும், குழந்தையையும் நரியம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். வயல்வெளியில் பிரசவம் பார்த்த அப்பகுதி பெண்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுதொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாராட்டுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : farm ,women ,hospital ,childbirth ,field , Farmers , field ,delivery ,pregnant women ,ambulance
× RELATED கேரளாவில் வேகமாக பரவி வரும்...