×

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடைகள் ஜனவரி 10-ம் தேதி செயல்படும் - தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடைகள் அனைத்தும் ஜனவரி 10-ம் தேதி வெள்ளிக்கிழமை செயல்படும் என்று தமழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, 29ம் தேதி ரூ.1000 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை எடப்பாடி, சென்னை, தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு ரூ.2,363 கோடி நிதியும்  ஒதுக்கி அரசாணையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு வாராந்திர விடுமுறை விடுவது வழக்கம். ஆனால் ஜனவரி 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகள் அனைத்தும் ஜனவரி 10-ம் தேதி வெள்ளிக்கிழமை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10-ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 16-ம் தேதி வியாழக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ration shops ,Pongal ,holiday ,Govt , Pongal gift, ration shops, no holiday, Friday, Govt
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா