×

சங்கராபுரத்தில் கிளம்பியது சர்ச்சை ஒரு ஊராட்சி தலைவர் பதவிக்கு இரண்டு பேருக்கு வெற்றிச்சான்று: விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை

காரைக்குடி: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவில் இரண்டு பேருக்கு வெற்றிச் சான்று வழங்கப்பட்டுள்ளதால் குழப்பம் நிலவியது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேவி மாங்குடி, பிரியதர்சினி அய்யப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகி இருந்தன. நேற்று முன்தினம் 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்து சான்றை வழங்கினார். ஆனால் பதிவான வாக்குகளுக்கும், அதிகாரிகள் எண்ணி அறிவித்த வாக்குகளுக்கும் வித்தியாசம் இருப்பதாக வேட்பாளர் பிரியதர்சினி அய்யப்பன், தேர்தல் பார்வையாளர் கருணாகரன், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோரிடம் புகார் அளித்தார். இதன்படி பதிவான வாக்குகள் மற்றும் துணை தேர்தல் நடத்தும் அலுவலர் பதிவு செய்து வைத்திருந்த பட்டியலின்படி கணக்கை சரி பார்த்தனர். அதிகாலை 2 மணி வரை கணக்கு பார்த்தும் சரியான முடிவு எடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.

இந்நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பிரியதர்சினி அய்யப்பன் கோரிக்கை மனு அளித்தார். அதனை அதிகாரிகள் ஏற்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டனர். ஆனால் இதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறி தேவி மாங்குடி மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் மாங்குடி, அவரது ஆதரவாளர்கள் தாங்கள் பெற்ற வெற்றி சான்றிதழுடன் வெளியேறினர். பின்னர் பிரியதர்சினி அய்யப்பன் மற்றும் அவரது முகவர்கள் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தினர். இதில் 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியதர்சினி அய்யப்பன் வெற்றி பெற்றதாக அறிவித்து அவருக்கும் சான்றிதழ் வழங்கினர்.இதுகுறித்து தேவி மாங்குடி கூறுகையில், ‘‘நான் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். பஞ்சாயத்து தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொள்வேன்’’ என்றார்.ஒரே பதவிக்கு இரண்டு பேர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கியுள்ளது காரைக்குடி பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்றம் செல்வோம் சட்டமன்ற காங். தலைவர் பேட்டி
இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது: சங்கராபுரம் ஊராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஒருவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில், அரசியல் நெருக்கடி காரணமாக, எதிர்த்து நின்ற வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார். தேர்தல் அதிகாரிக்கு வெற்றிச்சான்றை கொடுக்கத்தான் அதிகாரம் உள்ளது. அதன்பின் சான்று சரியா, தவறா என்று கூற அதிகாரிக்கோ, தேர்தல் ஆணையத்துக்கோ அதிகாரம் இல்லை. தேர்தல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிற்க வேண்டி வரும். வெற்றி பெற்றவர்களை எல்லாம் தோற்றதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையருக்கு இந்த பிரச்னை குறித்து அனுப்பி உள்ளேன். நாங்கள் சொல்லும் நபர்களுக்குதான் முடிவை சொல்ல வேண்டும் என நிர்ப்பந்தம் செய்துள்ளனர். சங்கராபுரம் பிரச்னை குறித்து நீதிமன்றம் செல்ல உள்ளோம். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் முதல்வர் தலையிடுகிறார். சட்டமன்ற தொடரில் இது குறித்து பேச உள்ளேன். இப்பிரச்னை குறித்து காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கூட்டணி கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் பேசி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜன. 6ல் பதவியேற்பேன் -பிரியதர்சினி அய்யப்பன் பேட்டி
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பிரியதர்சினி அய்யப்பன் கூறுகையில், ‘‘சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 11,754 வாக்குகள் பதிவானது. இதை எண்ணும்போது நாங்கள் 5,324 வாக்குகள் பெற்றதாகவும், அவர்கள் 5,524 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர் எனக்கூறி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், வாக்குகள் குறைகிறது என்று தேர்தல் பார்வையாளர், கலெக்டரிடம் முறையிட்டேன். இதனால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தேன்.

இதையடுத்து சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் அறிவித்தனர். பின்னர் மறுவாக்குபதிவு நடத்தினர். இதில் 63 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெற்றதாக அறிவித்து சான்று வழங்கினர். இதனை ஆன்லைனில் ஏற்றி உள்ளனர். ஒரு சில அதிகாரிகள் துணையுடன் தவறு செய்துள்ளனர். நான் முறைப்படி ஜன. 6ம் தேதி பதவியேற்றுக் கொள்வேன்’’ என்றார்.

Tags : Sankarapuram Two ,panchayat leader ,Sankarapuram , Controversy ,Sankarapuram,Two victories, panchayat leader,Vote counted,dawn
× RELATED சங்கராபுரம் ஊராட்சியில் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா