×

துறையூர் காந்தி நகரில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

* கொசுக்களின் கூடாரமானது சின்ன ஏரி
* கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

துறையூர்: துறையூர் நகராட்சி காந்தி நகரில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். இங்குள்ள சின்ன ஏரி கழிவுநீர் தேங்கி கொசுக்களின் கூடாரமாக மாறி வருகிறது. துறையூர் நகராட்சி 22வது வார்டை சேர்ந்தது காந்திநகர். துறையூரின் புகழ்மிக்க இடமாக திகழ்வது சின்ன ஏரி. இந்த ஏரியின் அருகே அமைந்துள்ளதுதான் காந்திநகர் பகுதி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் நிலவிய குடிநீர் பிரச்னை காரணமாக நகராட்சி நிர்வாகம் 3 அடி ஆழத்தில் குழி தோண்டி அதில் புதிதாக குழாய் அமைக்கப்பட்டது. ஏற்கனவே பழைய பைப் லைன் இருந்த நிலையில் புதிதாக போடுவதற்கு காரணம் என்ன? என மக்கள் கேள்வி எழுப்பினர். இந்த காந்திநகர் பகுதியில் பொக்லைன் இயந்திரம் உள்ளே சென்று குழி பறித்து பைப் லைன் அமைத்து சரியான முறையில் மூடப்பட்டததால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியபாரிகள் நடக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.

குழிகள் தோண்டும்போது பொக்லைன் இயந்திரம் வீட்டின் அருகே இருந்த கழிவுநீர் கால்வாய்கள் உடைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் கொசுக்கடியின் காரணமாக சுந்தரம் என்பவரது மகள் ஜெயஸ்ரீக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளதாக கூறுகின்றனர். எனவே பொக்லைனால் தோண்டப்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகனஓட்டிகள் கடும் சிரமத்தை அடைந்து வருகின்றனர். துறையூர் நகராட்சி நிர்வாகம் 10 நாட்களுக்கு மேலாகியும் இதனை இதுவரை கண்டுகொள்ளாமல் உள்ளது. மேலும் சின்ன ஏரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர், அதில் படர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளால் கொசுக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய்களும் பரவி வருவதாக பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற சூழலில் நகராட்சி நிர்வாகம் இந்த ஏரியை சுத்தப்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஏரியை சுத்தப்படுத்தும் பணிக்காக 2011ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் அதன்பின் எந்தவொரு பணியும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டது. துறையூர் மக்களின் வாழ்வாதாரமாக இருந்த இந்த ஏரி தற்போது கழிவுநீர் சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்கள் இந்த சின்ன ஏரியை பார்த்து முகம் சுழித்தவாறு செல்கின்றனர். எனவே துறையூர் மக்களின் துய்மையான காற்றை சுவாசிக்கவும், பல நோய்களிலிருந்து காப்பற்றவும், டெங்கு காய்ச்சல் பரவமால் இருக்கவும் அரசு மற்றும் மாவட்ட, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே துறையூர் காந்திநகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஏரியை சுத்தப்படுத்தும் பணிக்காக 2011ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் அதன்பின் எந்தவொரு பணியும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டது.



Tags : Thrissur Gandhi Thrissur Gandhi , Dengue fever,spreading, Thrissur Gandhi
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...