×

வரலாற்றில் முதல் முறையாக தங்கம் சவரன் 30,520க்கு விற்பனை

* ஒரே நாளில் 632 அதிகரிப்பு  
* அபரிமிதமாக உயர வாய்ப்பு

சென்னை, ஜன.4: தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக நேற்று சவரன் 30,520க்கு விற்பனையானது. ேநற்று ஒரே நாளில் மட்டும் சவரன் 632 அதிகரித்தது. வரும் நாட்களில் அபரிமித ஏற்றம் இருக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டது. சில சமயங்களில் அதிரடியாக விலை உயர்ந்தும் வந்தது. இந்த விலை ஏற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று சவரன் 29,880க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் (2ம் தேதி) சவரன் 29,888க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.79 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 3,815க்கும், சவரனுக்கு 632 அதிகரித்து ஒரு சவரன் 30,520க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் இதுதான் முதல்முறை. இதற்கு முன்னர் தங்கம் விலை சவரன் ₹30,000 வரை வந்துள்ளது தான் புதிய சாதனையாக இருந்து வந்தது. பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அடுத்தடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: உலக பொருளாதாரம் மந்தமான ஒரு சூழ்நிலையில் இருக்கும் பட்சத்திலோ, பொருளாதார சந்தையை சார்ந்த பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையிலோ முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். இது கடந்த காலம் விஷயங்கள் ஆகும். இன்று (நேற்று) அதிகாலை அமெரிக்க ராணுவம் ஈரான் மீது ஒரு வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. அதன் மூலமாக அதன் துணை ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ளார். இது அந்த பிராந்தியத்தில் பெரிய பதற்றத்தையும், உலக பங்கு சந்தையில் ஒரு பெரிய தாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் மற்ற துறை சார்ந்த பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் தங்கத்தின் மீது தான் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், உலகசந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது. இதுவும் தங்கம் விலை உயர்வதற்கு ஒரு பெரிய காரணமாக அமைந்துள்ளது. இன்னும் தங்கம் விலை அபரிதமாக உயர வாய்ப்புள்ளது. தினம், தினம் புதிய உச்சத்தை தொடக்கூடும். விலை தொடர்ந்து ஏறும். 3 மாதத்தில் சவரன் ரூ.34,000 கடக்கும். அதாவது, ஒரு கிராம் ரூ.4200 கடந்து செல்ல வாய்ப்புள்ளது. மார்ச் மாதத்திற்குள் சவரன் ரூ.34,000 கடக்க வாய்ப்புள்ளது. விலை உயர்ந்த போதும் தேவையானவர்கள் தங்கத்தை வாங்கி தான் வருகிறார்கள். இது வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தங்கம் விலை வரலாற்றில் இது தான் முதல் முறையாகும். இதற்கு முன்னர் ஒரு தடவை ரூ.30,000 வரை வந்தது. அப்போதைய விலையை விட தற்போதைய விலை உயர்வு தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும் என்றார்.

Tags : time , First time in history, Gold Shaving,0,520
× RELATED 10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி ஐடி...