×

தோல்வியடைந்த வேட்பாளர் ஒட்டிய போஸ்டர் வைரல் நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கலை...

பேரையூர்: சேடபட்டி அருகே தோல்வியடைய செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வேட்பாளர் போஸ்டர் ஒட்டியது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியம் கேத்துவார்பட்டி ஊராட்சி, 2வது வார்டில் முருகேசன், பவுன்தாய், தங்கப்பாண்டி, ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு தெரிவிக்கப்பட்டது. அதில் தங்கப்பாண்டி 39 வாக்குகள், பவுன்தாய் 22 வாக்குகள், முருகேசன் 7 வாக்குகள் பெற்றனர். இதில் முருகேசன் குறைந்த அளவு வாக்குகளே பெற்று தோல்வியடைந்தார். தோல்வியால் ஏற்பட்ட வருத்தத்தை உணர்த்தும் விதமாக அவர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து முருகேசன் போஸ்டர் ஒட்டியிருந்தார்.

அதில், ‘‘என்னை தோல்வியடைய செய்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கலை’’ என்று போஸ்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த போஸ்டரின் மூலம் தனது வேதனையை கூட, நகைச்சுவையாக சொன்ன விதமும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இது பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : candidate , I am not expecting ,poster viral ,failed candidate
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...