×

பாஜவினர் ஊருக்கு உபதேசம் செய்ய எந்த தகுதியும் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

சென்னை: பிணம் தின்னும் அரசியல் நடத்திய பாஜவினருக்கு, ஊருக்கு உபதேசம் செய்ய எந்த தகுதியும் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் வரலாறு காணாத வெற்றி பெற்று வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திமுகவும், காங்கிரசும் பிணம் தின்னும் அரசியல் செய்கின்றன என்று கூறியதோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள் என்றும் பேசியிருக்கிறார். விரக்தியின் விளிம்பிலும், வீழ்ச்சிப் பள்ளத்திலும் இருந்து கொண்டு பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

கோத்ரா ரயில் எரிப்பில் எந்த தொடர்பும் இல்லாத ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட போது தடுத்து நிறுத்தாத அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் இன்றைக்கு பாஜவின் பிரதமர். இத்தகைய பிணம் தின்னும் அரசியலை நடத்திய பாஜவினர் இன்றைக்கு ஊருக்கு உபதேசம் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை. இந்திய மண்ணில், மதவெறியை தூண்டுகிற விஷவித்துக்களை தூவி, அரசியல் ஆதாயம் தேடுவது பாஜவின் தலையாய கொள்கையாகும். இஸ்லாமியர்களை இந்தியாவில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டுமென்ற கோல்வால்கர் தத்துவத்தை நடைமுறைப்படுத்த முயல்கிற பாஜ தான் பிணம் தின்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன. இதை இன்றைக்கு இந்திய மக்கள் ஓரணியில் திரண்டு முறியடித்து வருகிறார்கள்.


Tags : town ,Bajawin , No qualification ,preach Bajp town, KSAlagiri
× RELATED மத்திய அரசு நடத்தும் ஆசிரியர்...