×

சென்னை புறநகரில் கடும் பனிமூட்டம் 50 விமான சேவைகள் பாதிப்பு

* பயணிகள் திண்டாட்டம்
* சரியான பதில் தராத அதிகாரிகள்

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியிலிருந்து 8.30 மணி வரை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த விமானம், 7.20 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த விமானம், 7.25 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானம், 7.30 மணிக்கு பெங்களூரில் இருந்து வந்த விமானம், காலை 8 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம், 8.05 மணிக்கு மும்பையில் இருந்து வந்த மற்றொரு விமானம், 8.10 மணிக்கு டெல்லியில் இருந்து வந்த விமானம், 8.15 மணிக்கு துபாயிலிருந்து வந்த விமானம், 8.25 மணிக்கு அபுதாபியில் இருந்து வந்த விமானம் மற்றும் அகமதாபாத்தில் இருந்து வந்த விமானம், காலை 8.30 மணிக்கு புனேயில் இருந்து வந்த விமானம் என மொத்தம் 11 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை.

இதையடுத்து மேற்கண்ட விமானங்கள் வானிலேயே வட்டமிட்டன. அதன்பிறகும் பனிமூட்டம் விலகாததால், 9 விமானங்கள் பெங்களூர், 2 விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதுதவிர, சென்னையில் தரையிறங்க வேண்டிய ஐதராபாத், பெங்களூர், டெல்லி, மும்பையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வானிலேயே நீண்டநேரம் வட்டமடித்துவிட்டு, காலை 9 மணிக்கு மேல் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின. பெங்களூர், கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் காலை 10 மணிக்கு மேல் ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு வர தொடங்கின. இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி, மும்பை, கொழும்பு, டெல்லி, கோவை, பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின், துபாய், லண்டன், கொல்கத்தா, சூரத் உள்பட 28 விமானங்கள் சுமார் இரண்டரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக, சுமார் 50 விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு,  ஆயிரக்கணக்கான பயணிகள் திண்டாடினர்.

ஆனால், பயணிகளுக்கு முறையாக எந்த விமானங்கள் எவ்வளவுநேரம் தாமதம், சென்னையில் எப்போது தரையிறங்கும், எந்தெந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டன என்பது குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. விமான கவுன்டர்களில், அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்களும் சரியான பதில் தரவில்லை. எனவே, விமானத்தில் செல்ல வந்த பயணிகள், உறவினர்களை வரவேற்க, வழியனுப்ப வந்தவர்கள் கடும் அவதிப்பட்டனர்.


Tags : Aviation Crashes ,Chennai ,Suburb , Heavy snow in Chennai suburb,50 Airlines delay
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...