×

ரோகிங்கியாவை நாடு கடத்துவதே மத்திய அரசின் அடுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஜிதேந்திரா அதிரடி

ஜம்மு: ‘‘ரோகிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்துவதே மத்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்,’’ என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்தார். மத்திய அரசு ெகாண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில், காஷ்மீரில் ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்தவர் உள்பட 13,700 வெளிநாட்டினர் அகதிகளாக வசித்து வருகின்றனர். இவர்களில் ரோகிங்கியா அகதிகள், அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில் நேற்று நடைபெற்ற காஷ்மீர் அரசு அலுவலர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று அவர் பேசியதாவது:

 நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமான  அதே நாளில், இச்சட்டம் காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டது. `இருந்த போதிலும்’, `ஆனால்’ என்ற சிக்கலே காஷ்மீரில் இந்த சட்டத்தை அமல்படுத்தும் போது ஏற்படவில்லை.
எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இங்குள்ள ரோகிங்கியர்களை அவர்களின் சொந்த நாடான மியான்மருக்கு திருப்பி அனுப்புவது தான். இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். குடியுரிமை திருத்த சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை பற்றி தான் கூறப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 6 சிறுபான்மை மதத்துக்குள் வரவில்லை. எனவே, ரோகிங்கியா அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைக்க வாய்ப்பே இல்லை.

எனவே, அவர்கள்  திருப்பி அனுப்பப்படுவார்கள்.  மேலும், மேற்கு வங்கத்தில் இருந்து அவர்கள் பல மாநிலங்களை கடந்து காஷ்மீருக்கு வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அவர்களை மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு செல்ல அனுமதித்தது யார். அவர்கள் காஷ்மீருக்கு இடம் பெயர்ந்ததில் அரசியல் நோக்கம் எதுவும் உள்ளதா எனவும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : deportation ,government ,Union Minister ,Rohingya ,Jitendra ,Jitendra Action ,Union , Rohingya, Union Minister of State, Jitendra
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...