×

ஆந்திராவின் தலைநகர் பிரச்னை: அமெரிக்க நிறுவன அறிக்கை ஜெகனிடம் சமர்ப்பிப்பு

திருமலை: ஆந்திர தலைநகர் தொடர்பாக அமெரிக்க தனியார் நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பாக 6ம் தேதி உயர்மட்ட கமிட்டி பரிசீலிக்க உள்ளது. ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு இருந்தபோது குண்டூர் மாவட்டத்தில் உள்ள 29 கிராமங்களை இணைத்து 1.10 லட்சம் கோடியில் அமராவதி தலைநகர் அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்காக 29 கிராமங்களில் இருந்து 34 ஆயிரம் ஏக்கர் நிலம் அரசு கையகப்படுத்தியது. இங்கு தற்காலிக சட்டப்பேரவை, தலைமை செயலகம், உயர்நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.  இதற்கிடையே, ஜெகன் மோகன் அரசு பதவியேற்ற பிறகு அமராவதி தலைநகராக தொடர்வது பற்றி ஆராய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜி.என்.ராவ் தலைமையில் நிபுணர்கள் கமிட்டி அமைத்தது. அதேபோன்று தலைநகருக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், வருவாய், முதலீடு செய்வது குறித்தும் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் அரசு அறிக்கை கேட்டிருந்தது.

இதற்கிடையே ஜி.என்.ராவ் கமிட்டி 2 வாரங்களுக்கு முன்பு அளித்த தனது அறிக்கையில், விசாகப்பட்டினத்தில் நிர்வாக தலைநகர், அமராவதியில் சட்டப்பேரவை தலைநகர், கர்னூலில் உயர் நீதிமன்ற தலைநகர் என 3 தலைநகராக பிரித்து 4 மண்டலங்களாக அரசு நிர்வாகத்தை செயல்படுத்த வேண்டுமென பரிந்துரை செய்தது. இதை முதல்வர் ஜெகனும் ஏற்றுள்ளார். இதனால், மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் குண்டூர் மாவட்டம், வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் நேற்று முதல்வர் ஜெகன் மோகனை சந்தித்து தங்களது அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இந்த இரண்டு அறிக்கைகளையும் மாநில நிதி அமைச்சர் ராஜேந்திரநாத் ரெட்டி தலைமையில் உயர் கமிட்டி வரும் 6ம் தேதி பரிசீலிக்கிறது. பிறகு 8ம் தேதி நடைபெறக்கூடிய அமைச்சரவை கூட்டத்தில் 2 கமிட்டி அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.
மேலும் உயர்கமிட்டி மூன்று வாரங்களுக்குள்  பரிசீலித்து தங்களது அறிக்கையை மாநில அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளது. இதையடுத்து சட்டப்பேரவையில் தலைநகர் குறித்து அரசின் முடிவு வெளியிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : US ,Jagan Andhra Pradesh ,Jagan , Andhra Capital, Andhra Pradesh, American Institute, Jagan
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!