அனைத்து நாடுகளுடனும் பலமான உறவை விரும்புகிறோம்: நாடாளுமன்றத்தில் கோத்தபய பேச்சு

கொழும்பு; அனைத்து  நாடுகளுடனும் வலுவான உறவை இலங்கை  விரும்புவதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொடங்கி வைத்து அதிபர் கோத்தபய  பேசினார்.  இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில்  ஆளும்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை வீழ்த்தி, கோத்தபய ராஜபக்சே வெற்றி  பெற்றார். அவர் இலங்கையின் 7வது அதிபராக கடந்த நவ.18ல்  பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 3ல் கூட இருந்த  நாடாளுமன்ற கூட்டம் ஜனவரி 3க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி நேற்று  நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது.  இதற்கு முன் அவை உறுப்பினராக  இல்லாததால், கோத்தபய நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தான்  முதல்முறையாக பங்கேற்றார்.

இதற்காக அவர் ஐரோப்பிய உடை அணிந்து  வந்திருந்தார். வழக்கமாக இவரது குடும்பத்தினர் தேசிய உடையுடன் அடர்ந்த  பழுப்பு நிற சால்வை அணிவது வழக்கம். கூட்டத் தொடரில் கோத்தபய ஆற்றிய தொடக்க  உரை: எனது குடும்பம் இந்த நாடாளுமன்றத்துடன் நீண்ட கால  தொடர்புடையது. திறன்மிக்க அரசு, ஊழல் மற்றும் குற்றங்களை வேரோடு அழிப்பதே  எனது அரசின் நோக்கம். உள்நாட்டு பொருளாதாரத்தை புதுப்பிப்பதன் மூலம்  உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அனைத்து நாடுகளுடனும் இலங்கை வலுவான உறவை கடைப்பிடிக்க விரும்புகிறது. எந்த வெளிநாட்டின்  முன்பும் மண்டியிட மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சி தலைவராக பிரேமதாசா பொறுப்பேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக நேற்று பொறுப்பேற்றார்.

Related Stories:

>