×

பேஸ்புக்கில் சரமாரி மோதல் சொந்த நாட்டுக்கு விரட்டுகிறேன்- அமைச்சர் மாட்டு மூத்திரமா குடிக்கிறீர்கள்? - மாணவன்

கொல்கத்தா: ‘முதலில் உன்னை உன் சொந்த நாட்டுக்கு பேக் செய்து அனுப்புகிறேன்,’ என சமூக வலைதளத்தில் முஸ்லிம் மாணவனை மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மிரட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 24ம் தேதி அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி, கவர்னர் முன் மேடையிலேயே அரசியலமைப்பு நகலை கிழித்தெறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில்தான், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை மாணவர்கள் அனுமதிக்காமல் சிறை பிடித்து தாக்கினர். அதற்கு அடுத்த நாள், பிர்பம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் முஸ்தாபிசுர் ரகுமான் என்பவர், பேஸ்புக்கில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பேஸ்புக்கில் அவர்கள் இடையே மாறி மாறி நடந்த மோதலின் விவரம் வருமாறு: ரகுமான்: மேற்கு வங்க மாநில பாஜ தலைவர் திலிப் கோஷ், மாட்டு பாலில் தங்கம் உள்ளது என்கிறார். இதிலிருந்து உங்களை போன்றவர்கள் எவ்வளவு படித்தவர்கள் என்பதை அறிகிறோம். பாபுல் சுப்ரியோ: முதலில் உன்னை உன் சொந்த நாட்டுக்கு பேக் செய்து அனுப்பி விட்டு, போஸ்ட்கார்டில் பதில் சொல்கிறேன். ரகுமான்: நான் இந்தியன், மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் என்பதற்கு என்னிடம் எல்லா ஆதாரமும் உள்ளது. முடிந்தால் என்னை விரட்டிப் பாருங்கள். நீங்கள் இந்த மாநில எம்பி.யாக இருந்த போதிலும், மேற்கு வங்க மக்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. நீங்கள் என்ன தினமும் மாட்டு மூத்திரமா குடிக்கிறீர்கள்?

- இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதை பார்த்த பல நெட்டிசன்கள், மாணவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் சர்ச்சையானது.  இது பற்றி ரகுமான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சமூக வலைதளத்தில் அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைத் தவிர வேறொன்றும் வேண்டாம்,’’ என்றார். இதற்கு பாபுல் சுப்ரியோ நேற்று அளித்த பதிலில், ‘‘அந்த மாணவன் சமூக வலைதளத்தில் தொடர்ந்து முறைகேடாக பேசி வருகிறார்.  அவரின் மதத்தோடு சம்பந்தப்படுத்தி நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே, முட்டாள்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை’’ என்றார். இருவருக்கும் நடக்கும் வார்த்தை போர், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



Tags : student , Facebook, conflict, minister, cow urine, student
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...