×

கேப்டன் கார்க் சதம்: இந்தியா யு-19 அபார வெற்றி

டர்பன்: தென் ஆப்ரிக்கா யு-19 அணியுடனான ஒருநாள் போட்டியில், இந்தியா யு-19 அணி 66 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சாட்ஸ்வொர்த் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா யு-19 அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன் குவித்தது. ஜெய்ஸ்வால் 13, சக்சேனா 7, திலக் வர்மா 42 ரன்னில் வெளியேற, கேப்டன் பிரியம் கார்க் - துருவ் ஜுரெல் இணை 4வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தது. பிரியம் கார்க் 110 ரன் (103 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஜுரெல் 65 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். ஷாஷ்வத் ராவத் 14, அன்கொலேகர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா யு-19 அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து 66 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

கேப்டன் பிரைஸ் பார்சன்ஸ் 57 ரன், ஆண்ட்ரூ லோவ் 45, ஜொனாதன் பேர்டு 22 ரன் எடுத்தனர். இந்தியா யு-19 பந்துவீச்சில் சுஷாந்த் மிஷ்ரா 4, ரவி பிஷ்னோய் 2, திலக், அன்கொலேகர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த தொடரில் இந்திய அணி நாளை ஜிம்பாப்வே யு-19 அணியையும், 7ம் தேதி நியூசிலாந்து யு-19 அணியையும் எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து ஜன. 12ம் தேதி ஆப்கானிஸ்தான் யு-19, ஜன. 14ம் தேதி ஜிம்பாப்வே யு-19 அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. உலக கோப்பை தொடர் ஜன. 17ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ம் தேதி வரை நடக்க உள்ளது.

Tags : U-19 ,Cork Chatham ,India ,win , Captain Cork, India U-19, South Africa U-19
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!