×

பரிதாப நிலையில் ஆட்டோமொபைல் வாகன விற்பனை டிசம்பரிலும் சரிவு

புதுடெல்லி: வாகன விற்பனை கடந்த டிசம்பர் மாதத்திலும் சரிவை சந்தித்துள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டு, இந்த துறையினருக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்து விட்டது.  பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் கடும் பாதிப்புக்கு ஆளான ஆட்டோமொபைல் துறை, இதில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. பாரத் ஸ்டேஜ் 6 இன்ஜின் வாகனங்களை மட்டுமே வரும் ஏப்ரல் முதல் விற்க வேண்டும். இதனால் வாகனங்கள் விலை அதிகரிக்கும். இருப்பினும், இப்போது தயாரித்து வைத்துள்ள வாகனங்களை கூட விற்க முடியாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. இதனால் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் டீலர்கள் மற்றும் ஆட்டோமொபைல் சார்ந்த உதிரிபாக உற்பத்தியாளர்களிடம் பணியாற்றிய சுமார் 3.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
 இந்நிலையில், வாகன விற்பனை கடந்த டிசம்பரிலும் சரிவை சந்தித்துள்ளது. வாகனங்கள் விலை ஜனவரியில் உயரும் என சில நிறுவனங்கள் முன்கூட்டியே அறிவித்து விட்டன.

அதோடு, ஆண்டு இறுதியில் வழங்கப்பட்ட அதிரடி தள்ளுபடி சலுகைகள் காரணமாகவும், பாரத் ஸ்டேஜ் 6 வாகனங்கள் விலை தற்போதைய வாகனங்களை விட மிக அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் ஒரு சில நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை சற்று உயர்ந்துள்ளது. ஆனாலும், பெரும்பாலான நிறுவனங்களின் கார்கள் விற்பனை சரிவையே சந்தித்துள்ளன. 8.29 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை விற்பனை சரிவு காணப்படுகிறது.  அதாவது, ஹூண்டாய் 9.8 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 10 சதவீதம், ஹோண்டா கார்ஸ் 36 சதவீதம், நிசான் 8.29 சதவீதம், டொயோட்டா 45 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. டூவீலர்களை பொறுத்தவரை ஹீரோ மோட்டார்ஸ் 6 சதவீதம், பஜாஜ் ஆட்டோ 21 சதவீதம், ராயல் என்பீல்டு 13 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. சுசூகி மோட்டார் சைக்கிள் விற்பனை ஒரு சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது.

 பொருளாதார மந்த நிலையால் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கி விட்டது. இதனால் மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிவுக்கு இதுவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த டிசம்பர் மாத விற்பனை சரிவால், கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு மோசமான மறக்க முடியாத ஆண்டாக மாறிவிட்டது என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப தயாராகும் பாஷ்
பொருளாதார மந்த நிலை காரணமாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட பின்னடைவால் சொகுசு கார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்துறையில் பல லட்சம் பேர் இதுவரை வேலை இழந்துள்ளனர். இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம், கார் விற்பனை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதால், இந்தியாவில் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் ஆயிரம் பேரை படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது என இந்த நிறுவனத்தின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் சவுமித்ர பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.


Tags : Automobiles, vehicle sales
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில்...