×

ஆதிவாசி மக்கள் பயன்பாட்டிற்காக பிஎஸ்என்எல் சேவை துவக்கம்

மூணாறு: மூணாறில் பழங்குடி மக்கள் வசிக்கும் இடமலைகுடி ,பெட்டிமுடி, ராஜமலை பகுதியில் புத்தாண்டு சலுகையாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல வருடங்களாக தொலைபேசி சேவை இல்லாமல் தவித்த ஆதிவாசி மக்களுக்கு தொலைபேசி சேவையை தேவிகுளம் துணை கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் தலைமையில் தொலைத்தொடர்பு சேவை துவங்கப்பட்டது. மூணாறில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் இடமலை குடி மற்றும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பெட்டிமுடி, ராஜமலை பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதி இல்லாமல் மக்கள் மற்றும் பொதுமக்கள் பரிதவித்து வந்தனர்.

இடமலை குடி மற்றும் பெட்டிமுடி மக்கள் தொலைத்தொடர்பு வசதி இல்லாமல் தினந்தோறும் தங்களின் முக்கிய தேவைகளுக்கு தொடர்புகொள்ள முடியாமலும், இடமலை குடியில் இருந்து மூணாறுக்கு வரும் நேரத்தில் வன உயிரினங்களில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள தகவல் தொடர்பு இல்லாமல் பரிதவித்தனர். கடந்த வருடங்களில் காட்டுமாடுகள் தாக்குதலில் 20க்கும் அதிகமான ஆதிவாசி மக்கள் பாதிக்கப்பட்டனர். யானைகள் மற்றும் காட்டு மாடுகள், காட்டு பன்றிகள் தாக்குதல் அதிகமான சூழலில் தாக்குதல் சம்பவம் குறித்து அறிவிக்க தொலைத்தொடர்பு வசதி இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் ஆதிவாசி மக்கள் நிலை வெளி உலகத்திற்கு அறியாத நிலை ஏற்பட்டது.

சில சமயங்களில் தொலைத்தொடர்பு வசதி இல்லாத காரணத்தால் நோயாளிகளை டோலி கட்டி மூணாறுக்கு எடுத்தும் வரும் நிலை உருவானது. ஆதிவாசி மக்கள் மற்றும் பெட்டிமுடி, ராஜமலை மக்களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு தேவிகுளம் துணை கலெக்டர் பிரேம் கிருஷ்ணன், பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெட்டிமுடி பகுதியில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை நேற்று முன்தினம் துவங்கப்பட்டுள்ளது. பெட்டிமுடி, இடமலை குடி ,ராஜமலை பொதுமக்கள் மற்றும் பழங்குடிமக்கள் பயன்பெறும் வகையில் தொலைத்தொடர்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுளது. இந்த சேவையை தேவிகுளம் துணை கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் துவங்கி வைத்தார்.

Tags : Launch ,BSNL ,Adivasi , BSNL
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...