×

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை; எதிர்கட்சிகள் எங்கு வேண்டுமென்றாலும் போராட்டம் நடத்தட்டும் : அமித்ஷா திட்டவட்டம்

ஜெய்ப்பூர் : எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராடினாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய முழு புரிதல் இல்லாமல், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டு உள்ளார். அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும் குடியுரிமை சட்டத்தில் இருந்து பாஜக அரசு ஒரு அங்குலம் கூட பின் வாங்காது என்று அமித்ஷா குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுவதுமாக படித்த பிறகு கேள்வி எழுப்ப வேண்டும் என்று அமித்ஷா விமர்சித்துள்ளார். ஒரு வேளை ராகுல் காந்தி இதுவரை படிக்கவில்லை என்றால் அதனை இத்தாலியில் மொழி பெயர்த்து வழங்க தயாராக இருப்பதாகவும் அமித்ஷா கூறினார். மேலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் எதிர்கட்சிகள் எங்கு வேண்டுமென்றாலும் போராட்டம் நடத்தட்டும் என்றும் அமித்ஷா கூறினார். அதோடு எதிர்க்கட்சிகள் தாங்கள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை பரப்பலாம் என அமித்ஷா கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. ஆதலால் தினந்தோறும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


Tags : Amit Shah ,opposition fight , Citizen, Home Minister, Amit Shah, Opposition parties
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...