×

நாங்குநேரி பகுதியில் தேளி மீன்களால் திணறும் ஊரக மீன்வளர்ப்பு தொழில்

நாங்குநேரி :  நாங்குநேரி பகுதியில் தேளி மீன்களால் ஊரக மீன் வளர்ப்பு தொழில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தேளி, ஆப்பிரிக்க கெளுத்தி, பூனை மீன், மீசை மீன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஒருவகை ஆப்பிரிக்க இன கெளுத்தி வகை மீன்கள், நாங்குநேரி பகுதி ஊரக குளங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஊரக மீன் வளர்ப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  இப்பகுதி கிராமப்புறங்களில் தற்போது தண்ணீர் நிறைந்துள்ள குளங்களில் கெண்டை வகைகளைச் சேர்ந்த கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை உள்ளிட்ட பல்வேறு மீன் குஞ்சுகளை மீன் பண்ணைகளில் இருந்து வாங்கி வளர்ப்பது வழக்கமாக உள்ளது.  

அவற்றிற்கு தங்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் சாணம் மற்றும் தவிடு புண்ணாக்கு ஆகியவற்றை உணவாக வழங்குகின்றனர். இதன் மூலம் 4 மாத காலத்திற்கு பின் பல ஆயிரம் டன்கள் உள்ளூர் வளர்ப்பு மீன்கள் பிடிக்கப்பட்டு அருகிலுள்ள சந்தையில் விற்று ஏலதாரர்கள் வருமானம் ஈட்டுவர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நாங்குநேரி பகுதியில் உள்ள ஊரக குளங்களை தேளி மீன்கள் ஆக்கிரமித்து வருகின்றன. இந்த தேளி மீன்கள் மாமிச பட்சிணியாக இருப்பதால் குளத்தில் இயற்கையாகவே இருக்கும் புழு பூச்சிகளை உண்கின்றன. மேலும் மீன் பண்ணைகளில் இருந்து விவசாயிகள் வாங்கி வந்து வளர்ப்பிற்காக விடும் கெண்டை மீன் குஞ்சுகளையும் தேளி மீன்கள் அழித்து விடுகின்றன.

பாரம்பரியமிக்க சுவையான மீன் வகைகளான அயிரை, சிறு கெண்டை வகைகள், கெளிறு, உழுவை போன்ற மக்கள் விரும்பும் மீன் இனங்களையும் அழிக்கின்றன. இதன் விளைவாக மனிதர்கள் மட்டுமின்றி அதனை விரும்பி உண்ணும் நீர்ப்பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். மேலும் ஊரக மீன் உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. நாங்குநேரி பெரியகுளத்தில் நீர் வற்றிய பிறகும், அதனுள் அமைந்துள்ள ஜீயர் ஊற்று மற்றும் குட்டைகளிலும், சிவன்  கோயில் தெப்பக்குளம் மற்றும் அதனை  ஒட்டியுள்ள கழிவுநீர் குட்டைகள், கல் குவாரிகள் ஆகியவற்றில் நிரந்தரமாக இந்த மீன்கள் வசிக்கின்றன.  

இந்த தேளி மீன்கள், மழைக்காலம் துவங்கி தண்ணீர் வரத்துவங்கியதும் அருகிலுள்ள குளங்களுக்கு சென்று விடுகின்றன.  இதனால் கடந்த சில ஆண்டுகளாக தேளி மீன்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது பெரும்பாலும் குளங்களில் மீன்குஞ்சு விட்டு வளர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே வரும் காலங்களில் நீர்நிலைகள் வற்றியவுடன் தேளி மீன்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

‘மண்ணுக்கு அடியில்  சென்றும் உயிர் வாழும்’

தேளி மீன்கள் மற்றவைப்போல் அல்லாமல் நீண்ட நாள் உயிர் வாழும் தன்மை கொண்டது. நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிய பிறகும் வண்டல் மண்ணுக்கு அடியில் சென்று காற்றை சுவாசித்து பல மாதங்கள் மயங்கிய நிலையில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மீண்டும் மழை பெய்து குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வந்ததும் மண்ணுக்குள் புதைந்திருந்த தேளி மீன்கள், வழக்கம்போல குளத்தில் வசிக்கத் தொடங்கி விடுகிறது.  ஒரு கெளுத்தி மீன் ஒரு ஆண்டில் பல ஆயிரம்  குஞ்சுகளை உற்பத்தி செய்கிறது.  இதனால் அவை குளங்களில் பல்கிப்பெருகி உள்ளூர் மீன்கள் உற்பத்தியை தடுப்பதுடன் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.


Tags : area ,Nankuneri ,Theli , Naguneri ,Rural Fisheries , fisherman,Theli fishes
× RELATED வாட்டி வதைக்கும்...