×

பேராவூரணி அருகே காவிரி கிளை, பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறைந்தது

*மீன்பிடி தொழிலாளர்கள் கவலை

பேராவூரணி : பேராவூரணி அருகே உள்ள காவிரி கிளை வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மீன்பிடி தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.டெல்டா பகுதியில் தொடர்ந்து பருவமழை பெய்ததால் கல்லணையில் இருந்து கிளை வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பேராவூரணி அருகே உள்ள காவிரி கிளை வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதில் ஆவணம் பகுதியை சேர்ந்த சிலர் தூண்டில் போட்டும், வலைகளை பயன்படுத்தியும் மீன் பிடித்து வருகின்றனர்.

இதில் சுவை நிறைந்த அயிரை, கெளுத்தி, குரவை, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் கிடைக்கின்றன. பேராவூரணி அடுத்த ஆவணம் பூசாரி தெருவை சேர்ந்த சிதம்பரம் என்பவர் விரித்திருந்த வலையில் 6க்கும் மேற்பட்ட கெளுத்தி மீன்கள் சிக்கின. இம்மீன்கள் ஒவ்வொன்றும் 800 கிராம் முதல் 1.5 கிலோ வரை எடை உள்ளதாக இருந்தது. சாதாரணமாக கிலோ 100 ரூபாய்க்கு இவ்வகை மீன்கள் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இந்த மீன்களை இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து மீன்பிடி தொழிலாளி சிதம்பரம் கூறியதாவது: அதிகாலை 5 மணியிலிருந்து கிளை வாய்க்காலில் 2 கிலோமீட்டர் சேற்றில் இறங்கி அலைந்து நடந்து திரிந்து வலைவிரித்ததில் இன்றைக்கு 6 மீன்கள் கிடைத்தது. நேற்று அலைந்து 50 ரூபாய்க்கு கூட மீன் கிடைக்கவில்லை. ஒரு நாள் மீன் கிடைக்கும். ஒரு நாள் கிடைக்காமல் போய் விடும். இதை கொண்டு தான் குடும்பத்தை நடத்தி கொண்டிருக்கிறேன். சிலர் மது குடித்து விட்டு மதுபாட்டில்களை உடைத்து வாய்க்காலில் வீசி சென்று விடுகின்றனர் அது காலில் குத்தி காயம் ஏற்படுத்துவதால் வலி காரணமாக சில நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் போய் விடுகிறது.

கரையோரம் புதர்களில் கிடக்கும் விஷப்பாம்புகளாலும் ஆபத்து ஏற்படும். இருப்பினும் என் வாழ்க்கைக்கான ஆதாரம் இந்த ஆற்று மீன்களிடம் தான் உள்ளது. கிளை வாய்க்காலில் தண்ணீர் வருவது நின்று விட்டால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். தற்போது வாய்க்காலில் தண்ணீர் குறைவாக தான் வருகிறது என்றார். ஆற்றில் பிடித்த மீன்களை பிடித்த கையோடு விலை பேசி வாங்கிய விவசாயி முருகன் கூறியதாவது: சுவையுடைய இந்த மீன்கள் மலிவு விலையில் கிடைப்பதால் இதை விரும்பி வாங்கி செல்கிறேன். இந்த வழியாக வயலுக்கு வரும்போது அடிக்கடி மீன்களை வீட்டுக்கு வாங்கி செல்வது வழக்கம் என்றார்.

Tags : Cauvery Branch ,Peravurani ,Cauvery Irrigation , Fishes ,Cauvery irrigation,Peravurani
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு