×

மூக்கையூர் துறைமுகத்தில் கழிவு மணல் குவியலை அகற்ற வேண்டும்

சாயல்குடி :   சாயல்குடி அருகே மூக்கையூரில் மிக ஆளமான கடற்கரை உள்ளது. இங்கு ரூ.170.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடற்கரையிலிருந்து, கடல் மட்டத்தோடு சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு பாறை கற்களை போட்டு பாதை அமைக்கப்பட்டு, படகுகள் நிறுத்தும் தளம், வலை பின்னுதல், உலர்த்துதல், மீன் ஏலக்கூடம், ஓய்வறை, உலர்களம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு  வசதிகள் செய்யபட்டுள்ளது. ஆனால் துறைமுகம் உள்கட்டமைப்பில் முக்கியமாக இருக்க வேண்டியது,  ஷெட்டி பாலம் எனப்படும் படகு நிறுத்தும் இடமாகும். இங்கு 200 விசை படகுகள் நிறுத்தும் அளவிற்கு பாலம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் பாலம் கட்டுமானத்திற்கு கீழ் சிமென்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற கடல் மண், களிமண் போடப்பட்டு கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் தற்போது சேதமடைந்து வருகிறது.

மேலும் மூக்கையூர், கன்னிகாபுரி உள்ளிட்ட அருகிலிருக்கும் கிராம மீனவர்கள் 80க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் வைத்துள்ளனர். ஆனால் பாரம்பரியமிக்க உள்ளூர் நாட்டு படகுகளை நிறுத்த துறைமுகத்தில் இடம் ஒதுக்கவில்லை. கடல்அலையை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் முழுமையாக அமைக்காததால், துறைமுக பாலங்கள் சேதமடைந்து வருகிறது. படகு நிறுத்து தளம் வரை அலை வருவதால் கரையோரம் நிறுத்தப்படும் படகுகள் அனைத்தும் ஒன்றோடு, ஒன்று மோதி சேதமடைந்து உடைந்துவிடும். இதனால் மீனவர்கள் பல்வேறு துயரங்களை சந்திக்கும் அவலம் இருப்பதாக மீனவர்கள் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக படகு நிறுத்தும் இடம் மிதவை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு,  படகு நிறுத்து தளம் உள்ள பிளாட்பாரத்தில் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. இவை கழிவு களிமண் கலந்த மணலாக உள்ளது. இவை நடைமேடையில் கொட்டப்பட்டுள்ளதால் வலை போன்ற மீன்பிடி சாதனங்களை எடுத்துச் செல்வதற்கும், கடலில் பிடித்து வரப்படும் மீன்களை கொண்டு வருவதற்கும்  சிரமமாக உள்ளதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர். கடற்கரை மற்றும் துறைமுகத்தை பார்த்து ரசிப்பதற்கு கடலாடி, கமுதி, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதி மற்றும் வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில்  துறைமுகத்தில் சிதறி கிடக்கும் கடல் சங்கு, மீன், கருவாடு கழிவு, குவிக்கப்பட்டுள்ள கழிவு மணல் போன்றவற்றால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கின்றனர். துறைமுகம் பகுதியில் சுகாதாரக்கேடு நிலவி, தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மூக்கையூர் கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே துறைமுகம் பகுதியில் மீனவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கழிவு மணல், சுகாதாரக்கேடை விளைவிக்க கூடிய கடல் கழிவுகளை அப்புறப்படுத்த மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mookaiyur Harbor , mookaiyur Harbour, sayalkudi,waste sand
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...