×

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்; 16 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு; திமுக தொடர்ந்து முன்னிலை

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணி நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்கட்டமாக கடந்த 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 37,830 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45,336 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இதில் 76.19 சதவீத வாக்குகள் பதிவானது. அதேபோல் 2ம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2,544 ஒன்றிய குழு உறுப்பினர், 38,916 ஊராட்சி வார்டு உறுப்பினர், 4,924 ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 77.73 சதவீத வாக்குகள் பதிவானது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அதில் மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மீதம் உள்ள பதவிகள் பஞ்சாயத்து தேர்தலுக்கு தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவின் போது வன்முறை நடந்த 30 பூத்துகளில் கடந்த 30ம் தேதியும், 9 பூத்துகளில் நேற்று முன்தினமும் மறுவாக்குப்பதிவு நடந்தது. முதல் கட்டத் தேர்தலில், 76 சதவீதமும், 2வது கட்டத் தேர்தலில் 77 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்தது. பின்னர், வாக்குப் பெட்டிகள், சீல் வைத்து பாதுகாப்புடன் வைத்திருந்தனர். வாக்கு பெட்டிகள் இருந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று (2ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை 25 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. 17 மாவட்டங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் திமுக 2,168 இடங்களிலும், அதிமுக 2,061 இடங்களிலும், மற்றவர்கள் 401 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 515 மாவட்டக் கவுன்சிலர் தேர்தலில் திமுக 256 இடங்களிலும் அதிமுக 229 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

பெரம்பலூரில் திமுக 7 இடங்களில் வெற்றி

பெரம்பலூரில் மொத்தமுள்ள 8 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போல் பெரம்பலூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 38 இடங்களை கைப்பற்றியுள்ளது.

திருவாரூர்

திருவாரூரில் மொத்தமுள்ள 18 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திருவாரூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 74 இடங்களை கைப்பற்றியுள்ளது.

மதுரையை கைப்பற்றிய திமுக

மதுரையில் மொத்தமுள்ள 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக கூட்டணி 6 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 5 இடங்களை கைப்பற்றியுள்ளது.

தூத்துக்குடியை கைப்பற்றிய அதிமுக

தூத்துக்குடியில் மொத்தமுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக 5 இடங்களை கைப்பற்றியுள்ளது. தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 72 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக 67 இடங்களை கைப்பற்றியுள்ளது.

சிவகங்கை

சிவகங்கையில் மொத்தமுள்ள 16 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக  கூட்டணி 9 இடங்களையும், திமுக கூட்டணி 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

அரியலூர்

அரியலூரில் மொத்தமுள்ள 12 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 11 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. அரியலூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக கூட்டணி 41 இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 82 இடங்களில் திமுக 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


Tags : districts ,DM ,elections , Local elections, local election results
× RELATED ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக்...