×

60 ஓட்டில் வென்றவருக்கு எதிராக அதிமுக முறையீடு 3 முறை எண்ணியும் முடிவை அறிவிக்காத மர்மம்: முதல்வர் உறவினர் தலையீட்டால் முடிவை மாற்ற சதி என கர்ப்பிணி கண்ணீர்

சேலம்: சங்ககிரியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில் 3 முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. முதல்வரின் உறவினர் தலையீட்டால் இது நடப்பதாகவும், முடிவுகள் மாறினால் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை  செய்வேன் என்றும் கர்ப்பிணி வேட்பாளர் கதறினார். சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்துக்கான வாக்குகள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி தலைவருக்கான வாக்குகள் மாலை 4மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டது. திமுகவை சேர்ந்த வனிதா கந்தசாமி 2,692 வாக்குகளும், அதிமுகவை சேர்ந்த முனீஸ்வரி 2632 வாக்குகளும் பெற்றனர். பதிவான வாக்குகளில் 290 செல்லாத ஓட்டுக்கள் என்றும், 11 ஓட்டுகள் சந்தேகமானவை என்றும் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக 60 வாக்குகள் வித்தியாசத்தில் வனிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிமுகவினர், இதை ஏற்க முடியாது, மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்றனர். இதையடுத்து அடுத்தடுத்து 3 முறை வாக்குகள் எண்ணப்பட்டது. அப்போதும் வனிதாவே அதிக வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் முடிவு அறிவிக்கப்படவில்லை. இதைக்கண்டு வனிதா அதிர்ச்சியில் உறைந்தார். கர்ப்பிணியான அவர், தனது வெற்றியை திட்டமிட்டு நிராகரிக்கப் பார்க்கின்றனர் என்று கூறி அழுதது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘கர்ப்பிணியான நான், மிகவும் கஷ்டப்பட்டு வாக்கு சேகரித்து போராடி, அதிக வாக்குகள் பெற்றுள்ளேன். ஆனால் முதல்வரின் உறவினர் தூண்டுதலால் 3 முறை மீண்டும், மீண்டும் வாக்குகளை எண்ணினர்.

அதில் நான் அதிக வாக்குகள் பெற்றும், பல மணி நேரமாக முடிவுகளை அறிவிக்காமல் என்னை அலைக்கழிக்கின்றனர். ஆளுங்கட்சியினர் தலையீட்டால் எனது வெற்றி பாதிக்கும் வகையில் முடிவுகளை மாற்றினால் கண்டிப்பாக இந்த இடத்திலேயே  குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்வேன்’’ என்றார்.  இதைக்கண்டு திடுக்கிட்ட முகவர்களும், உறவினர்களும் அவருக்கு ஆறுதல் கூறி, அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

Tags : AIADMK ,winner ,intervention ,CM ,UTI , AMP, Sankagiri, Repeat count
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...