×

அனைத்து அமைச்சர்களும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றியும் உள்ளாட்சி தேர்தலில் பின்னடைவு ஏன்? எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து அமைச்சர்களும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றியும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணிக்கு 315 மையங்களில் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக போட்டியிட்ட திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர்.

ஆனாலும் திமுக முன்னிலை பெற்ற இடங்களில் தேர்தல் அதிகாரிகள் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் காட்டினர். அதனால், திமுகவினருக்கும் வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் நேரம் ஆக ஆக திமுக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இரவு விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதி முடிவு இன்று தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. கடைசி நிலவரப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அதிமுக அமைச்சர்கள் அனைவரும் கடந்த ஒரு மாதமாக மாவட்டங்களில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர். 30 அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினார்கள். காரணம், இந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றால்தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்க அதிமுக கட்சி தலைமை திட்டமிட்டிருந்தது. மேலும், இந்த தேர்தல் வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்றும் அதிமுகவினர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு கடும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு 7 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு திடீரென வந்து அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது சென்னையில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள், முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள் அனைவரும் அவர்களின் சொந்த மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை பணியை மேற்பார்வையிட்டு வருவதால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், “அமைச்சர்கள் அனைவரும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றியும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது ஏன்?” என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், உள்ளாட்சி கவுன்சிலர் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டாலும் மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், மாவட்ட ஒன்றிய தலைவர், மாவட்ட ஒன்றிய துணை தலைவர் பதவிக்காக நடைபெறும் மறைமுக தேர்தலில் வெற்றிபெறுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Tags : government ,ministers ,OPS Emergency Consultation , All Ministers, Elections, Edappadi, OPS
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...