×

முரசொலி அறக்கட்டளை நில விவகாரம்: தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜராக தேவையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முரசொலி அறக்கட்டளை நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின நல ஆணைய  விசாரணைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராக தேவையில்லை என்றும் அவருக்கு பதிலாக பிரதிநிதி ஆஜராகலாம் என்று அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையில் ஆணைய துணைத் தலைவர் முருகன் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.   முரசொலி அறக்கட்டளைக்கு சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜக தரப்பில் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இந்த புகார் மீதான விசாரணைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.   இந்நிலையில், தேசிய பட்டியலின நல ஆணையத்திற்கு முரசொலி அறக்கட்டளை நிலம்  தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும்  சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது என்றும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி  உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 அந்த மனுவில், முரசொலி சொத்து முறையாக நில உரிமையாளர்களிடம் இருந்து விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் உரிமையானது 83 ஆண்டுகளாக முரசொலி அறக்கட்டளையின் வசம் தான் உள்ளது.
 பட்டியலின மக்களின் பாதுகாப்பு, உரிமை மீறல், மற்றும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பான புகார்களை மட்டுமே தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியும்.  சொத்து தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும். புகாரளித்தவர் பாஜகவின் மாநில செயலாளர் சீனிவாசன், பட்டியலினத்தை சேர்ந்தவர் அல்ல. அரசியல் உள்நோக்கத்துடன் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புகாரை ரத்து செய்ய வேண்டும். பாஜக பிரமுகர் சீனிவாசனுக்கு எதிராக எழும்பூர்  நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னையில் பஞ்சமி நிலங்களே இல்லை என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்தார்.

முரசொலி நிலம் தொடர்பான புகார் உள் நோக்கம் கொண்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றியை சகித்து கொள்ள முடியாமல் பாஜக இந்த புகாரை அளித்துள்ளது. எனவே, முரசொலி நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, அரசியல் காரணங்களுக்காக அடிப்படை ஆதாரம் இல்லாமல் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் துணை தலைவர் முருகன் அரசியல் கட்சியை சேர்ந்தவர். எனவே, இதை அரசியலாக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர் இந்த விசாரணையில் கலந்துகொள்ளவது ஏற்கத்தக்கதல்ல. சொத்து தொடர்பான வழக்குகளை ஆணையம் விசாரிக்க முடியாது என்று வாதிட்டார்.

  வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 7ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பட்டியலின ஆணைய விசாரணைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராக தேவையில்லை. அவருக்கு பதில் அவரது பிரதிநிதி ஆஜராகலாம். இந்த புகார் மீதான விசாரணையில்  ஆணைய துணைத்தலைவர் முருகன் கலந்துகொள்ள கூடாது. இந்த வழக்கில் சீனிவாசன், தேசிய பட்டியலின ஆணையம், ஆணைய துணை தலைவர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.



Tags : Chennai High Court ,National SC / ST Commission ,MK Stalin , Murasoli Foundation, Land Affairs, National SC / ST Commission, MK Stalin, Madras High Court
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...