×

தேசிய மக்கள் தொகை பதிவுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவுக்கான கணக்கெடுப்பின் போது, பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டுமென வெளியான தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. என்பிஆர் கணக்கெடுப்புக்கு எந்த ஆவணத்தையும் காட்டவோ, தரவோ தேவையில்லை என்று அது விளக்கம் அளித்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) என்பது இந்தியாவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் குறித்த பதிவேடு. ஒரு நபர் குறிப்பிட்ட பகுதியில் ஆறு மாதமோ அல்லது அதற்கு அதிகமான காலம் வசித்தாலோ அல்லது ஒரு இடத்தில் அடுத்த ஆறு மாத காலம் வசிக்க இருந்தாலோ அவர் வழக்கமான குடிமகனாக கருதப்பட்டு என்பிஆர் பட்டியலில் தகவல்கள் சேர்க்கப்படும். கடந்த 2010ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 2015ல் புதுப்பிக்கப்பட்டது.

தற்போது, 2021 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதையொட்டி, என்பிஆர் பட்டியல் புதுப்பிக்கப்பட உள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அசாம் தவிர நாடு முழுவதும் இதற்கான கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் அரசு ஊழியர்கள் வீடு வீடாக வந்து பொதுமக்களிடம் தகவலை கேட்டு பெறுவார்கள். ஏற்கனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) நாடு முழுவதும் அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு கூறிய நிலையில், என்பிஆர் கணக்கெடுப்பு மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த கணக்கெடுப்பின் போது எந்த ஆவணமும் கேட்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், என்பிஆர் கணக்கெடுப்பின் போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்கள் ஆதார், ஓட்டுநர் உரிமம், பான் எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டும், பெற்றோர் பிறந்த இடம் உள்ளிட்ட 21 தகவல்களை வழங்க வேண்டும் என்று தகவல்கள் பரவின. இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெற்றோரின் பிறந்த இடம், அதற்கான ஆவணங்கள் கேட்கப்படுமா என்பது போன்ற குழப்பங்களும் நிலவின. இந்நிலையில்,  அந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘என்பிஆர் புதுப்பிப்பு கணக்கெடுப்பின் போது, பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை தேடிப்பிடித்து தர வேண்டுமென வெளியான தகவல் தவறானது. பொதுமக்கள் யாரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் எந்த ஆவணத்தையும் தர வேண்டிய அவசியமில்லை. வீடு வீடாக கணக்கெடுப்பு பணி நடைபெறும். அப்போது, தனிநபர்கள் தரும் தகவல்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும். எந்த ஆவணத்தையும் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : National Population Registration: Federal Home Ministry Explanation ,Union Home Ministry , National Population Register, Ministry of Interior
× RELATED சீக்கிய தீவிரவாதிகளிடம் கெஜ்ரிவால்...