×

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஏன் பேசுவது கிடையாது? பிரதமர் மோடி ஆவேச கேள்வி

துமகூரு: ‘‘மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், பாகிஸ்தான் சிறுபான்மை மக்கள் கொடுமைப்படுத்தப்படுது பற்றி எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை?’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி நேற்று வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர், முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் சார்பில்  கிஷான் சன்மான் திட்டத்தின் 3வது தவணை நிதி வெளியீடு மற்றும் வேளாண்  துறையில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா துமகூரு மாநகரின் மைய பகுதியில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் நடந்தது.  

இதில், மோடி பேசியதாவது:
நமது நாட்டில் அனுமதி பெறாமல் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை அடையாளம் காணவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றுள்ளோம். சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது, நமது ஜனநாயகம், சட்டத்தை இழிவுபடுத்துவதற்கு சமமாகும்.

பாகிஸ்தானில் உள்ள இந்து, சீக்கியர், சமண வகுப்பினர் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். சிறுபான்மை மக்கள் அங்கு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அதை எதிர்க்காதவர்கள், அதை பற்றி ஏன் என்று கேள்வி கேட்க முடியாதவர்கள், தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்? எனது தலைமையான அரசு சாதி, மதம், பேதம் பார்க்காமல் மக்களின் நலனுக்காக இரவு-பகல் பாராமல் உழைத்து வருகிறது. பல நாடுகளை சேர்ந்த அகதிகள் நமது நாட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு  இருப்பிடம் அமைத்து பாதுகாப்பு கொடுப்பது நமது கடமை. அதை செய்து வருகிறோம். தேசிய குடியுரிமை சட்டத்தின் உண்மை புரியாமல் எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டிவிட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

* விவசாயிகளுக்கு ரூ.6,000; 3ம் தவணை
விழாவில் பிரதமர் பேசும்போது, ‘‘கிஷான் சன்மான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம், முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் 2 கட்டம் முடிந்துள்ள  நிலையில், 3வது கட்ட திட்டத்தின் துவக்க விழா இன்று நடந்து வருகிறது. மூன்றாவது கட்டத்தில் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி இன்று ஒரே நாளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 31.72 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயனடைந்து உள்ளனர்,’’ என்றார்.

* தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வசதி
மோடி மேலும் பேசுகையில், ‘‘நாட்டில்  மீன் பிடிப்பு தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஆழ் கடலில் சென்று மீன் பிடிப்பவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும். நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் படகு, தோணிகள்  தயாரித்து வழங்கவும் மீன் வளர்ச்சிக்காக தனி வாரியம் அமைத்து ரூ.7 ஆயிரம் கோடி செலவில் நல திட்டங்கள் செயல்படுத்தப்படும். தோணி, படகு உள்ளிட்டவைகளை நவீனமாக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்,’’ என்றார்.

*இளம் விஞ்ஞானிகளுக்காக சென்னை, 4 நகரங்களில் தனி ஆய்வு மையங்கள்
பெங்களூருவில் நடந்த விழாவில், ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் 35 வயதுக்கு உட்பட்ட இளம் விஞ்ஞானிகள் பணியாற்ற கூடிய 5 ஆய்வு கூடங்களை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவை பெங்களூரு, ஐதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘‘உலக வரைபடத்தில் இந்தியாவின் பலத்தை தீர்மானிக்கும் காலம் இது. இது 21ம் நூற்றாண்டில் பிறந்த இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான காலம். நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பு மட்டும், இளம் விஞ்ஞானிகளுக்கு கிடைக்கவில்லை. தீவிரவாத அச்சுறுத்துல் அதிகரிக்கும் வேளையில் உலகின் பாதுகாப்புக்கு சேவையாற்றவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நூற்றாண்டில் டிஆர்டிஓ, மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் சக்தியுடன் மாற்றி யோசித்து முக்கிய பங்காற்ற வேண்டும்’’ என்றார்.

Tags : opponents ,Modi ,Pakistan , Citizenship law, protesters, Pakistan, Prime Minister Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...