×

எல்லை தாண்டி தாக்குவோம் என்ற இந்திய புதிய தளபதி கருத்து பொறுப்பற்றது: பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: ‘எல்லை தாண்டி தாக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது’ என இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே கூறியிருப்பது பொறுப்பற்றது,’ என பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. இந்திய ராணுவத்தின் தரைப்படையின் புதிய தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘தீவிரவாத கொள்கையை பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்றால், தீவிரவாதத்தை, அது தோன்றும் இடத்திலேயே, தாக்கி அழிக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது.

எல்லை தாண்டி தீவிரவாதத்தை முறியடிக்க, சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாலகோட் ஸ்டிரைக் என நமது பதிலடியை ஏற்கனவே வலுவாக காட்டி உள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் எல்லை தாண்டி தாக்குவோம்,’ என்றார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய ராணுவ தளபதியின் கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். எல்லை தாண்டி தாக்குவோம் என்பது பொறுப்பற்ற பேச்சு. இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கையை முறியடிக்க பாகிஸ்தான் தயார் நிலையில் உள்ளது. பாலகோட் அத்துமீறலின் போது பாகிஸ்தான் கொடுத்த பதிலடியை யாரும் மறக்க முடியாது,’ என கூறியுள்ளது.


Tags : Commander-in-Chief ,Pakistan ,Indian ,border ,crossing , Crossing the border, attacking, new commander of india, opinion, pakistan, condemnation
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...